`இந்தியா எங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறது!' - பாகிஸ்தான் குற்றச்சாட்டு | India planning another attack, accuses Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (07/04/2019)

கடைசி தொடர்பு:16:43 (07/04/2019)

`இந்தியா எங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறது!' - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இந்தியா, தங்கள் நாட்டின் மீது ஏப்ரல் 16 முதல் 20ம் தேதிக்குள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. 

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி


புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில், தீவிரவாதத் தளம் அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. ஆனால், இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. 

சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் விமானப் படைகள், கடந்த பிப்ரவரி 27ல் தாக்குதல் நடத்த முயன்றன. பாகிஸ்தான் விமானப்படையின் முயற்சியை இந்திய விமானப்படை தடுத்து, பதில் தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் விமானப் படையின் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல, மிக் 21 பைசான் ரக விமானம் ஒன்றை இந்திய விமானப்படை இழந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கிய இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. பின்னர், கடந்த 1-ம் தேதி அவரை வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

இதனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இருநாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தநிலையில், இந்தியா தங்கள் நாட்டின் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியிருக்கிறது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, `பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தத் தாக்குதலை வரும் 16 முதல் 20ம் தேதிக்குள் நிகழ்த்த இந்தியா திட்டமிட்டிருப்பதாகவும் எங்களுக்குத் தெரியவந்திருக்கிறது' என்று குற்றம்சாட்டினார். ஆனால், எந்தத் தகவலின் அடிப்படையில் பேசுவதாக அவர்  குறிப்பிடவில்லை. அதேபோல், இந்தத் தகவலை நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் தனது  முடிவுக்கு பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின்  இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லை.