ப்ப்ப்பா… 17 அடி நீளம்.. 63 கிலோ! -  புளோரிடாவை ஆட்டிப்படைக்கும் பர்மீஸ் மலைப்பாம்புகள் | Scientists captured 17 foot long python in Florida

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (08/04/2019)

கடைசி தொடர்பு:16:52 (08/04/2019)

ப்ப்ப்பா… 17 அடி நீளம்.. 63 கிலோ! -  புளோரிடாவை ஆட்டிப்படைக்கும் பர்மீஸ் மலைப்பாம்புகள்

பர்மீஸ் மலைப்பாம்பு உலகின் மிகப்பெரிய பாம்பு ரகங்களில் ஒன்றாகும். பர்மீஸ் மலைப்பாம்புகளிலேயே மிகப்பெரிய மலைப்பாம்பை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

மலைப்பாம்பு

தென் புளோரிடாவில் மியாமி என்னும் பகுதியில் மிகப்பெரிய விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது (Big Cypress National Preserve). சுமார் 7,29,000 ஏக்கரில் மரங்கள், வனவிலங்குகள் என இயற்கையைப் பாதுகாக்கும் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன் எடை 140 பவுண்டு. மேலும், அதன் வயிற்றில் 73 முட்டைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சரணாலயத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி உள்ளது. நான்கு ஆராய்ச்சியாளர்கள் மலைப் பாம்பை கையில் ஏந்தி நிற்கின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள்

 

இந்த பர்மீஸ் மலைப்பாம்புகள் தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாக கொண்டவை. சமீப காலமாகவே அவை புளோரிடாவின் வனப்பகுதிகளுக்குள் இருக்கும் சிறிய உயிரினங்களைச் சூறையாடி வருகின்றன. இதனால் ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் இனப்பெருக்கத்தைக் குறைக்க முடிவு செய்தனர். ஆண் மலைப்பாம்புகளின் உடலில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களைப் பொருத்தி அதைப் பயன்படுத்தி பெண் மலைப்பாம்புகளைப் பிடித்து வந்தனர். அதாவது ஆண் மலைப்பாம்புகள் இனப்பெருக்கத்துக்காகப் பெண் மலைப்பாம்புகளைத் தேடிச் செல்லும் அந்தச் சமயத்தில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் சிக்னல் வைத்து ஆராய்ச்சியாளர்கள் பெண் மலைப்பாம்பை பிடித்துவிடுவார்கள். அப்படிச் சிக்கியதுதான் இந்த ராட்சச பெண் மலைப்பாம்பு. இதுவரை புளோரிடா சரணாலயத்தில் பிடிக்கப்பட்ட பாம்புகளிலேயே இதுதான் மிகப்பெரிய பாம்பு.

மலைப்பாம்பின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்காக வேட்டைக்காரர்களுக்குப் போட்டி நடத்தி வருகின்றனர். பெண் மலைப்பாம்பைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த 2013-ம் ஆண்டின் பைத்தான் சவாலுக்கு சுமார் 1,600 வேட்டைக்காரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், அந்தப் போட்டியில் 68 பாம்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, 2017-ம் ஆண்டு மலைப்பாம்புகளை கருணைக்கொலை செய்வதற்கு 25 வேட்டைக்காரர்களுக்கு புளோரிடா அரசு பணம் கொடுத்தது. இப்படியெல்லாம் புளோரிடா அரசாங்கம் மலைப்பாம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த திண்டாடி வரும் வேளையில் 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பு 73 முட்டைகளுடன் அகப்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் ஆராய்ச்சியாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க