தீவிரவாத எதிர்ப்புக்கிடையே சமூகவலைதளத்தைக் கலக்கும் பாகிஸ்தான் இளம் பாடகி! | Young Pakistani Singer Sana Tajik wins social media

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (10/04/2019)

கடைசி தொடர்பு:21:15 (10/04/2019)

தீவிரவாத எதிர்ப்புக்கிடையே சமூகவலைதளத்தைக் கலக்கும் பாகிஸ்தான் இளம் பாடகி!

பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துன்குவா, மத அடிப்படைவாத தாலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். பெண்களுக்கு விதிக்கப்படும் சமூகக் கட்டுப்பாடுகளை மீறும் பெண்களைச் சுட்டுக்கொல்லும் கொடூரம் இங்கே அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக, அப்பகுதியைச் சேர்ந்த மேடைப்பாடகிகளில் 15 பேர் வரை கடந்த ஆண்டில் மட்டுமே தாலிபான்கள் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். 2018, ஆகஸ்ட் மாதத்தில் ரேஷ்மா என்ற பஷ்தூ மொழிப் பாடகியை அவரது கணவரே சுட்டுக்கொன்றார். இத்தனை அச்சுறுத்தல் மிகுந்த பகுதியிலிருந்து சனா தஜிக் என்ற 20 வயது பாடகி, தைரியமாக பாடல் வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்துவருகிறார்.

சனா தஜிக்

சிறு வயதிலேயே சனா தஜிக்கிற்கு இசை மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது. குறிப்பாக, பாகிஸ்தானின் பஷ்தூ மொழிப்பாடகர் ஹரூன் பாச்சாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்டார். அந்த ஈர்ப்பினால், பஷ்தூ நாட்டுப்புறப் பாடல்களை மேடையில் பாடுவதில் ஆர்வம்காட்டினார். தாலிபான்களின் அச்சுறுத்தல் இருப்பதால் அவரது பெற்றோர்களும், அந்தக் கிராமத்தினரும் அவரது ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள். எனினும், தனக்கிருக்கும் இசை ஆர்வத்தை பெற்றோருக்குப் புரியவைத்து தைரியமூட்டினார். அதையடுத்து, இரண்டாண்டுகளுக்கு முன்னர் மொத்தக் குடும்பமும் பெஷாவர் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கே பி.எஸ். பட்டப்படிப்பைப் படித்தபடியே, நாட்டுப்புறக் கலைஞர் குல்சார் ஆலமிடம் சில மாதங்கள் பயிற்சியெடுத்தார். 

சனா தஜிக்

கடந்த ஆண்டு, தனது முதல் பாடல் வீடியோவை தானே பாடி, நடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவர் பாடகியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே அவரது வீடியோவைப் பார்த்தபின் எதிர்ப்பைக் கைவிட்டனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன், `ஹலாகா' என்னும் இரண்டாவது ஆல்பத்தையும் வெளியிட்டார். இந்த ஆல்பம் எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய ஹிட் அடித்தது. சமூக வலைதளங்களில் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். பிரபல பாடகியானதைத் தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்.  

ஒருபுறம் ரசிகர்கள் குவிந்தாலும், வீடியோ ஆல்பத்தில் மத அடையாளங்களின்றி, பர்தா இன்றி பாடி நடித்திருப்பதால் தாலிபான்களின் எதிர்ப்பு குறித்த எச்சரிக்கையுணர்வும் இருக்கிறது. இவரது கலைப்பயணம் குறித்து கூறுகையில், ``இசை மீதான காதலால், பெற்றோரின் ஒப்புதலோடு இதில் இயங்கி வருகிறேன். என் போன்ற பாடகிகள், பாதுகாப்புக்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல் நேர்மறை சிந்தனையோடு தைரியமாக இயங்க வேண்டும். இசையால் சமூகத்தில் அமைதியைப் பரவச்செய்ய வேண்டும்" என்கிறார்.