`100 ஆண்டுகள் நிறைவு!' - ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்த பிரிட்டன் | "Deeply Regret Jallianwala Bagh": British PM Theresa May In Parliament

வெளியிடப்பட்ட நேரம்: 21:17 (10/04/2019)

கடைசி தொடர்பு:21:17 (10/04/2019)

`100 ஆண்டுகள் நிறைவு!' - ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்த பிரிட்டன்

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து நூறாண்டுகள் கடந்த நிலையில், இந்தக் கோர சம்பவத்துக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

தெரஸா மே

1919-ம் ஆண்டு ரௌலட் சட்டம் என்ற மோசமான சட்டம் இயற்றப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் பிரிட்டிஷ் அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஒன்று கூடினர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த ஜெனரல் டயர் தன் படையுடன், சீக்கியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தினார். 1600-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியானது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மிகமோசமான நடவடிக்கையாக ஜாலியன் வாலாபாக் படுகொலை விமர்சிக்கப்படுகிறது.

ஜாலியான் வாலாபாக்

இந்தச் சம்பவத்துக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், இதுகுறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்து வரும் 13-ம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், இன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கூடியது. இந்தக் கூட்டத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்வதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே அறிவித்தார். அதேபோல நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டிஷ் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோனும் முழு மனதுடன் வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.