43 நாள்களுக்குப் பின் சர்வதேச பத்திரிகையாளர்களை அனுமதித்த பாகிஸ்தான்! - பால்கோட்டில் என்ன நடந்தது? | Pakistan allows international media peoples to balakot

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (11/04/2019)

கடைசி தொடர்பு:13:15 (11/04/2019)

43 நாள்களுக்குப் பின் சர்வதேச பத்திரிகையாளர்களை அனுமதித்த பாகிஸ்தான்! - பால்கோட்டில் என்ன நடந்தது?

இந்தியாவின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இந்தியா நடத்திய தாக்குதல்குறித்தும் பல்வேறு தகவல்கள் இன்று வரை தொடர்ந்து வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க அரசு, பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது.

பாலகோட்

Photo Credit: BBC

இந்திய விமானங்கள், 'ஆளில்லாத பகுதிகளில் குண்டு வீசிச் சென்றன. இதனால், சில மரங்கள் மட்டுமே வேரோடு சாய்ந்தன. மற்றபடி எந்தச் சேதமும் இல்லை. இந்தியா குறிப்பிடுவதுபோன்று, குறிப்பிட்ட அந்த இடத்தில் ஜெயிஷ் - இ - முகமது அமைப்பின் எந்த முகாமும் இல்லை' என்று மறுத்தது. எங்களின் மரங்களை இந்தியா சேதப்படுத்தியதாக ஐ.நா-விலும் புகார் அளித்தது பாகிஸ்தான். 

புல்வாமா தாக்குதல்

இந்த விவகாரம், இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆளும் பா.ஜக அரசு, வேண்டும் என்றே தேர்தல் யுக்தியாக விமானப்படை தாக்குதலை விளம்பரப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இன்றளவும் பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசாரங்களில், ``பால்கோட் தாக்குதல்களை நடத்தியது யார் என்பதைக் கவனித்து, இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.     

விமானப்படை

இந்நிலையில், பால்கோட் தாக்குதல் நடைபெற்ற 43 நாள்கள் கழித்து, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் செயல்படும் சர்வதேச ஊடகங்களை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடும் அந்தப் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். இந்தப் பயணத்தின்போது சில வெளிநாட்டு அதிகாரிகளும், சில நாடுகளின் தூதுவர்களும் உடன் இருந்தனர். 

முன்னதாக தாக்குதல் நடைபெற்ற சில தினங்களில் பாகிஸ்தான், ஊடகங்களை அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாகப் தெரிவித்தது. ஆனால், பின்னர் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது. இந்த நிலையில்தான், தாக்குதல் நடந்து 43 நாள்களுக்குப் பின்னர் சில பத்திரிகையாளர்களை அனுமதித்துள்ளது பாகிஸ்தான். ஆனால், 'சிறிது நேரம்தான் அங்கிருப்பவர்களிடம் பேச வேண்டும்' உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தாக்குதல் நடைபெற்றதாக சில்லப்படும் பகுதி

Photo Credit: BBC

இந்தப் பயணம் தொடர்பாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித்தொடர்பாளர் கென் ஆசிஃப் கஃபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சர்வதேச பத்திரிகையாளர்களும், பல்வேறு நாட்டைச் சேர்ந்த தூதுவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் இந்தியா தாக்குதல் நடத்தியதாகச் சொன்ன பால்கோட் பகுதிகளைப் பார்வையிட்டனர்.  இந்தியா சொல்லியதற்கு எதிராகத்தான் கள நிலவரம் உள்ளது” எனப் பதிவிட்டிருந்தார். 

இதில் பயணம் செய்த பி.பி.சி நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒருவர், ''இஸ்லாமாபாத்தில் ஹெலிகாப்டரில் பயணம் தொடங்கியது. மன்சேஹ்ரா என்னும் இடத்தில் முதலில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணிநேரம் கடுமையான மலைப் பாதைகளில் பயணம் மேற்கொண்டோம். 

பாகிஸ்தான்

 

இஸ்லாமிய மத பள்ளியான மதரசாவுக்கு செல்லும் பாதையில், சில இடங்களில் குண்டு விழுந்த தடங்களும், சில மரங்கள் வேரோடு சாய்ந்திருந்ததையும் காண முடிந்தது. அந்தப் பகுதி, மனித நடமாட்டம் இல்லாத பகுதியாகத்தான் இருந்தது'' என்கிறார், அந்த பத்திரிகையாளர். 

இறுதியாக, மலை உச்சியில் இருந்த மதரசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்குதான் தீவிரவாத முகாம் இருப்பதாகவும், விமானப் படை நடத்திய தாக்குதலில் பலர் பலியானதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது.  

மதராசா

Photo Credit: BBC

மதரசா தொடர்பாக பி.பி.சி வெளியிட்டுள்ள கட்டுரையில், ``அந்தக் கட்டடங்களின் அமைப்பைக் காணும்போது, புதிதாகக் கட்டப்பட்டது போன்று தெரியவில்லை. மேலும், தாக்குதலில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட இடம் போன்றும் அது இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்டடங்கள் அப்படியேதான் உள்ளன எனவும், சில பகுதிகள் பழைய கட்டடங்களாகத்தான் உள்ளன எனவும், அங்கு சுமார் 150 முதல் 200 மாணவர்கள் வரை படிக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதரசா பள்ளியில் இருந்த அறிவிப்புப் பலகை ஒன்றில், பிப்ரவரி 27 முதல் மார்ச் 14-ம் தேதி வரை மதரசா பள்ளி மூடப்படும் என்ற அறிவிப்பு இருந்தது. இது தொடர்பாக அங்கிருந்த ஆசிரியர்களிடம் கேட்டபோது, இங்கு நிலவிய பதற்றமான சூழல் காரணமாக மூடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். 

பால்கோட் பகுதியில் உள்ள மதரசாவுக்குச் சென்ற முதல் பத்திரிகைக் குழு இதுவாகும். முன்னதாக, அல்- ஜசீரா பத்திரிகையின் பத்திரிகையாளர்கள், தாக்குதல் நடந்த பகுதிக்குச் சென்றபோதும், மதரசா பகுதிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மதராசா

Photo Credit: BBC

அந்த இடங்களுக்கு பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டாலும், குறிப்பிட்ட சில பகுதிக்குள் யாரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மற்றும் அவரது உறவினர் தொடர்பான கேள்விகளுக்கு, பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து பதில் அளிக்க மறுத்ததாகவும், பி.பி.சி-யின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடம்  பத்திரிகையாளர்கள் பேச முற்பட்டபோது, பாகிஸ்தான் அதிகாரிகள், ``சீக்கிரம்... சீக்கிரம்... அதிக நேரம் பேசக் கூடாது” என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பத்திரிகையாளர்களை அழைத்துச்செல்வதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பாகிஸ்தான் அதிகாரிகள், ``இந்தப் பகுதிகளில் நிலவிவந்த பதற்றமான சூழல் மற்றும் மக்களை அழைத்துச்செல்வதில் உள்ள சிரமம் காரணமாகத் தாமதம் ஆனது. தற்போதுதான் சரியான நேரம் வந்தது” என்றனர். 

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் தொடர்பு அமைச்சகத்தை பி.பி.சி தொடர்பு கொண்டபோது, ``ஒன்றரை மாதம் கழித்துதான் அவர்கள் அந்தப் பகுதிக்கு அனுமதித்துள்ளார்கள். இது ஒன்றேபோதும்” என்றார். இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன், பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 'இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் வந்தால் இந்தியா- பாகிஸ்தான் பிரச்னைகள் தீர்க்கப்படும்' என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.