'என்னால் இதை நம்பவே முடியல!' - பிளாக்ஹோல் புகைப்படத்தை உருவாக்கிய பெண் நெகிழ்ச்சி | the woman behind the photo of a black hole

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (11/04/2019)

கடைசி தொடர்பு:15:15 (11/04/2019)

'என்னால் இதை நம்பவே முடியல!' - பிளாக்ஹோல் புகைப்படத்தை உருவாக்கிய பெண் நெகிழ்ச்சி

கேத்தி போமன்

முதன் முதலாகக் கருந்துளை ஒன்றின் புகைப்படத்தை நேற்றைக்கு வெளியிட்டு, உலகை ஆச்சர்யப்படவைத்திருக்கிறார்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். அந்த கருந்துளையின் புகைப்படம், இதுவரை மனிதர்கள் பார்க்காத ஒன்றாக இருந்தது. 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும்  Messier 87 என்ற கேலக்ஸியின் மையத்தில் அமைந்திருக்கிறது இந்தக் கருந்துளை. அதன் நிறை என்பது நமது சூரியனைப் போல 6.5 பில்லியன் மடங்கு இருக்கிறது. அந்தக் கருந்துளையைப் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்காக, உலகின் வெவ்வேறு இடங்களில் பல தொலைநோக்கிகள் நிறுவப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து பெறப்படும் டேட்டாக்கள் அனைத்தும் ஒரு ஹார்ட் டிரைவில் பதிந்து வைக்கப்படும். இப்படி பல்வேறு இடங்களிலிருந்து பெறப்படும் டேட்டாக்கள் அடங்கிய பல ஹார்ட் டிரைவ்கள் அனைத்தும் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜிக்கு சொந்தமான Haystack என்ற விண்வெளி ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கேதான், அவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடந்துவந்தது. அங்கே, அரை டன்னுக்கும் மேல் ஹார்ட் டிரைவ்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன . இப்படி 5 பீட்டாபைட் அளவுக்கு மேல் இருந்த டேட்டாக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்தால் மட்டுமே கருந்துளையின் புகைப்படத்தை உருவாக்க முடியும் என்றபோது, அந்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு கை கொடுத்திருக்கிறார், கேத்தி போமன் (Katie Bouman).

பிளாக்ஹோல்

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவரான இவர், டேட்டாக்களை ஒருங்கிணைக்கும் கம்ப்யூட்டர் அல்காரிதம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். CHIRP என்று பெயரிடப்பட்ட இதன் மூலமாகவே டேட்டாக்களை ஒருங்கிணைத்து புகைப்படத்தை உருவாக்கும் பணி சாத்தியமாகியிருக்கிறது. இப்போது, உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் கருந்துளையின் புகைப்படத்துக்குப் பின்னால் இருப்பவர், கேத்தி போமன்தான். முதன் முதலாக அவர் கருந்துளையின் புகைப்படத்தை லேப்டாப்பில் பார்த்தபோது எடுக்கப்பட்ட போட்டோவை தற்போது, ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் கேத்தி. 'நான் உருவாக்கிய, என்னால் நம்பவே முடியாத கருந்துளை ஒன்றின் புகைப்படத்தை இப்போது நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்' என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்