``நீங்கள் இதை எதிர்க்க வேண்டும்!" - கோஷம் எழுப்பிய அசாஞ்சேவை கைது செய்த லண்டன் போலீஸ் | London Police Arrest WikiLeaks founder Julian Assange

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (11/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (11/04/2019)

``நீங்கள் இதை எதிர்க்க வேண்டும்!" - கோஷம் எழுப்பிய அசாஞ்சேவை கைது செய்த லண்டன் போலீஸ்

ஜூலியன் அசாஞ்சே

2017-ம் ஆண்டு ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே இன்று காலை லண்டனில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஸ்வீடன் நாட்டில் தொடரப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்படலாம் என அஞ்சிய காரணத்தால் ஈக்வடார் நாட்டிடம் புகலிடம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மேலும், கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக அந்நாட்டின் தூதரகத்தில் தங்கியிருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக ஈக்வடாருக்கும் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் இடையே இருந்த சுமுகமான உறவில் விரிசல் ஏற்பட்டது. தனிப்பட்ட மெசேஜ்களையும், புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுவிட்டதாக அந்நாட்டின் அதிபரான லெனின் மொரேனோ (Lenín Moreno) அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவர் சட்ட விதிகளை மீறிவிட்டதாகவும் இந்த மாதத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். ஈக்வடார் நாட்டு அரசு புகலிடம் அளிக்க மறுத்துவிட்டதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

விக்கிலீக்ஸ்

Photo Credit:Ruptly

இந்த நிலையில்தான் இன்று காலை ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தங்கியிருந்த ஜூலியன் அசாஞ்சேவை வலுக்கட்டாயமாக லண்டன் காவல்துறையினர் கைது செய்து வெளியேற்றி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காவல்துறையினர் வெளியே இழுத்து வரும்போது அவர் `இங்கிலாந்து நிச்சயமாக இதை எதிர்க்க வேண்டும், நீங்களும் இதை எதிர்க்க வேண்டும்" எனக் கோஷம் எழுப்பியிருக்கிறார். நீதிமன்றத்தில் சரணடைய மறுத்ததால் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு கொடுத்த பிடிவாரன்டு அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது சென்ட்ரல் லண்டன் காவல்நிலையத்தில் இருப்பதாகவும், விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்திருக்கிறார் பிரிட்டன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சஜித் ஜாவித்.

சஜித் ஜாவித்

மேலும் " ஈக்வடார் நாட்டின் தூதரகத்தினுள் நுழைந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளார். அந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சட்ட நடைமுறைகளின்படி  அவர் தற்போது காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளார். இந்தக் கைது நடவடிக்கைக்காக ஈக்வடார் நாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்துக்கு மேலானவர்கள் இங்கே யாரும் கிடையாது'' என அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.