`ஒரே ஒரு கவுன்...ஓஹோன்னு வாழ்க்கை!' - வைரலாகும் பிலிப்பைன்ஸ் டிசைனர் மாணவி | Philippines Teen Made dress Herself

வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (12/04/2019)

கடைசி தொடர்பு:15:56 (12/04/2019)

`ஒரே ஒரு கவுன்...ஓஹோன்னு வாழ்க்கை!' - வைரலாகும் பிலிப்பைன்ஸ் டிசைனர் மாணவி

ஆடை தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் புகைப்படங்களாக எடுத்து, பின்னர் அந்த ஆடையையும் அணிந்து புகைப்படமெடுத்து, ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு, உடனே பெரிய அளவில் வைரலாகி, சுமார் 4 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்தது. அந்த ஆடையைப் பார்த்து உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளது.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சியரா கன் என்ற 17 வயது மாணவி தயாரித்த கவுன், ட்விட்டரில் வைரலாகியுள்ளது. பெயின்டிங்கில் ஆர்வமுள்ள இவர், தனது பள்ளிப்படிப்பு முடிந்ததும் நடக்கும் பிரிவு உபச்சார நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, பிரத்யேகமான அலங்கார கவுனை அவராகவே வடிவமைத்துள்ளார். அந்த அலங்கார ஆடையில், அக்ரிலிக் பெயின்ட் மூலம் 80 மலர்களை வரைந்து, அலங்காரக் கல் வேலைப்பாடுகள் வைத்து, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் செலவிட்டு, பொறுமையாக, மிக அழகாகத் தயாரித்துள்ளார்.

சியரா கன்

இந்த ஆடை, தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் புகைப்படங்கள் எடுத்து, பின்னர் அந்த ஆடையையும் அணிந்து புகைப்படமெடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு, உடனே பெரிய அளவில் வைரலாகி, சுமார் 4 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்தது. அந்த ஆடையைப் பார்த்து, உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளது. 17 வயது பெண், இதை வடிவமைத்தாள் என்பதை நம்பவே முடியவில்லை. அவ்வளவு அற்புதமாக உள்ளது என்றும், உங்களுடைய ஆடையை நீங்களே தயாரிக்கும்போது ஏற்படும் உணர்வை விவரிக்கவே முடியாது என்றும், இதுபோன்ற ஆடைகள் தயாரிப்பதைத் தொழிலாகச் செய்ய முடியுமா? நான் விலைகொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறேன் என்றும் சிலர் பாராட்டியுள்ளனர்.

சியரா கன்

ட்விட்டர்

'மிகுந்த ஆர்வத்தோடு இந்த ஆடையை, தனியொருவராக நீங்கள் வடிவமைத்திருப்பது அறிந்து கண்ணீரே வந்துவிட்டது' என்று ஒருவர் உணர்ச்சிப்பெருக்கோடு பாராட்டியுள்ளார். அமெரிக்காவிலுள்ள ஒரு தொழில் முறை டிசைனர், இந்த ஆடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த டிசைனைப் பார்த்து அசந்துவிட்டேன் என்றெல்லாம் புகழ்ந்துதள்ளியிருக்கிறார். இன்னொருவர், சியரா கன்னின் புகைப்படத்தை ஓவியமாகவே வரைந்து, அவருக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார். ட்விட்டரில் கிடைத்துள்ள பலத்த வரவேற்பு, சியரா கன்னை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டர்

அனைவருக்கும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுமளவிற்கு பாராட்டுகள் இன்னமும் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இனி, சியரா கன் இந்த ஆடை வடிவமைப்பை முழுநேரத் தொழிலாகச் செய்வாரா என்பதை காலம்தான் முடிவுசெய்யும்.