`இரு நாடுகளின் உறவு மேம்பட சிறப்பான பணி!' - பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது | Russia announces top honor for PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (12/04/2019)

கடைசி தொடர்பு:16:31 (12/04/2019)

`இரு நாடுகளின் உறவு மேம்பட சிறப்பான பணி!' - பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது

பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூஸ் தி அபோஸ்தல் (Order of St Andrew the Apostle) விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, தனது ஐந்தாண்டுகால ஆட்சிக் காலத்தில், ரஷ்யாவுடன் நெருக்கம்காட்டி வந்தார். அதேபோல, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், மோடியை நண்பர் என்றே அடைமொழி இட்டு அழைத்துவந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

`ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூஸ் தி அபோஸ்தல்' என்றழைக்கப்படும் அந்த விருது, 17-ம் நூற்றாண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் மிகவும் பழைமையான மற்றும் உயரிய விருதாகக் கருதப்படும் இந்த விருது, சோவியத் யூனியன் சிதறியதால் 1918-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பின்னர், 1998-ம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் இந்த விருதை ரஷ்யா வழங்கிவருகிறது. சிறந்த சேவையாற்றிவரும் பொதுவாழ்வில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மற்ற ரஷ்யக் குடிமகன்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 

பிரதமர் மோடிக்கு விருது அறிவிப்பு

அந்த வகையில், ரஷ்யா - இந்தியா இடையிலான உறவு மேம்பட, திறம்பட செயல்பட்டதற்காக, பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையொப்பமிட்டிருப்பதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்திருக்கிறது. உலக அளவில் பிரதமர் மோடி  பெறும் 7-வது விருது இது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, சவுதி அரேபியா, பாலஸ்தீனம்  மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய  நாடுகளின் உயரிய விருதுகளைப் பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்.