மனித மூதாதையர்களின் புதிய இனமா? - பிலிப்பைன்ஸின் 50,000 ஆண்டு தொல்பொருள்கள் சொல்லும் பதில் | New Human Ancestor Species Discovered in the Philippines

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (12/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (12/04/2019)

மனித மூதாதையர்களின் புதிய இனமா? - பிலிப்பைன்ஸின் 50,000 ஆண்டு தொல்பொருள்கள் சொல்லும் பதில்

மனித மூதாதையர்

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவில் உள்ள குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் இதுவரை அறியப்படாத மனித இனத்தினுடையதாக இருக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த இனம் தற்போதைய மனிதனின் நேரடி சந்ததியாக இருக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பொருள்களை ஆய்வு செய்து பார்த்தபோது அவற்றின் காலம் 50,000 முதல் 67,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனத் தெரிய வந்திருக்கிறது. இந்தத் தொல்பொருள்களுக்குச் சொந்தமான மனித இனத்துக்கு ஹோமோ லூசோனெனின்சிஸ் (Homo luzonensis) எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

தொல்பொருள்

அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் இப்போதைய மனிதர்களின் உடல் பண்புகளிலிருந்து பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகிறது. அதனால் இது ஒரு புதிய இனமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளரான அர்மன்ட் சால்வடர் மிஜரஸ் (Armand Salvador Mijares) இந்தப் புதை படிமங்களைக் கண்டறிவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

ஹோமோ லூசோனெனின்சிஸ் (Homo luzonensis)

"அகழ்வாராய்ச்சியின் ஆரம்பத்திலிருந்து, இந்தத் தொல்பொருள்களின் அசாதாரணமான பண்புகளை நாங்கள் உணர்ந்தோம். 7 பற்கள் மற்றும் 5 கால் எலும்புகள் கிட்டத்தட்ட இன்றைய மனித இனத்தை ஒத்தவையாக இருந்தாலும் அவற்றின் பண்புகள் ஆச்சர்யமூட்டும் வகையில் இருந்தது." இவர்களின் முன்னோர்கள் யார் எனக் கண்டறியும் ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிறார் இது தொடர்பான ஆய்வின்  இணைத் தலைவரான ஃப்ளோரண்ட் டெட்ரோயிட் .மேலும் உயரம் குறைவாகவும்  சிறிய மூளையும் கொண்டவர்களாக இருப்பதால் இவர்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவைச் சார்ந்த ஹோமின்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.