' 'பப்ஜி' ஆபத்தானது, தயவுசெஞ்சு தடை பண்ணுங்க'- பெற்றோர்களின் கோரிக்கையால் பப்ஜிக்கு தடை விதித்த நேபாளம் | PUBG banned in Nepal after getting a lot of complaints from parents

வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (12/04/2019)

கடைசி தொடர்பு:21:09 (12/04/2019)

' 'பப்ஜி' ஆபத்தானது, தயவுசெஞ்சு தடை பண்ணுங்க'- பெற்றோர்களின் கோரிக்கையால் பப்ஜிக்கு தடை விதித்த நேபாளம்

பப்ஜி

பெற்றோர்களிடம் இருந்து தொடர்ச்சியாக வந்த கோரிக்கையின் விளைவாகப் பிரபல மொபைல் கேமான பப்ஜியைத் தடை விதித்திருக்கிறது  அண்டை நாடான நேபாளம். கடந்த சில மாதங்களாக, உலக அளவில் பிரபலமாகத் தொடங்கியது பப்ஜி கேம். இதைப் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்களும்கூட விளையாடத் தொடங்கினார்கள். இப்படிப் பல தரப்பினரிடம் கிடைத்த வரவேற்பால் டவுண்லோடு எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது. அதேநேரம், இதை நீண்ட நேரம் விளையாடுவதால் மன நலம் பாதிப்புக்குள்ளாவதாகத் தொடர்ந்து பலர் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

PUBG

குறிப்பாக, பெற்றோர்களிடம் இருந்து அதிகமாகப் புகார்கள்  எழுந்தன. இந்தியாவில்கூட சில இடங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் இதை விளையாடத் தடை விதிக்கப்பட்டது. மேலும், சில இடங்களில் காவல் துறையும் தடை விதித்திருந்தது, அதை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்நிலையில், நேற்றைக்கு பப்ஜி கேமுக்கு முழுவதுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேபாள அரசின் அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள். நேற்று முன்தினம், காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தில் பப்ஜியைத் தடைசெய்ய அனுமதிக்கக் கோரி, பெருநகர குற்றப்பிரிவு சார்பில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே, இது எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குவதாக வாதிடப்பட்டது. அதனடிப்படையில், அன்றைய தினமே பப்ஜிக்குத் தடை விதிக்க அனுமதி வழங்கியது.

PUBG

பப்ஜியால், ஆபத்தான விளைவுகள் சிறுவர்களிடம் ஏற்படுவதாகப் பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து தொடர்ச்சியாக, பெருமளவில் வந்து குவிந்த கோரிக்கைகளின் காரணமாகவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் கொடுத்த அனுமதியைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் மொபைல் நிறுவனங்களுக்கு பப்ஜி கேமை உடனடியாக முடக்குமாறு நேபாள தொலைத்தொடர்பு ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.