`7,000 கி.மீ பயணம்; கூகுள் எர்த்தில் ஜி.பி.எஸ் ஆர்ட்! - ஜப்பான் இளைஞரின் கின்னஸ் சாதனை ப்ரப்போஸல் | Man travells 7000 km to create GPS art

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (13/04/2019)

கடைசி தொடர்பு:10:00 (16/04/2019)

`7,000 கி.மீ பயணம்; கூகுள் எர்த்தில் ஜி.பி.எஸ் ஆர்ட்! - ஜப்பான் இளைஞரின் கின்னஸ் சாதனை ப்ரப்போஸல்

பல வைரல் காதல் ப்ரொபோஸ்களை இணையத்தில் பார்த்திருப்போம். காதலர்கள் தங்களின் இணையை சர்ப்ரைஸ் செய்ய பல விதமாக யோசிக்கிறார்கள். புதுசு புதுசாக யோசித்து வியக்க வைக்கிறார்கள். இது டெக்னாலஜி காலம். ஜப்பான் டெக்னாலஜியில் முன்னணியில் உள்ள நாடு. இந்த நாட்டில்தான் ஒருவர் தனது காதலிக்குத் திருமண ப்ரப்போஸ் செய்ய டெக்னாலஜி உதவியுடன் சுமார் 7,000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளார். 

ஜி.பி.எஸ் டெக்னாலஜி

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரை சேர்ந்தவர் யாஸ்ஸன் டகாஹஷி. இவரின் தோழி நாட்சுகி. யாஸ்ஸன் டகாஹஷிக்கு தன் தோழியிடம் ப்ரப்போஸ் செய்ய வேண்டும். ஆனால், எப்படி எனத் தெரியவில்லை. அப்போதுதான் அவருக்கு ஜி.பி.எஸ் ஆர்ட் குறித்து தெரிய வருகிறது. அதாவது, கூகுள் எர்த் உதவியுடன், சரியான திட்டமிடலுடன் ஒரு வடிவத்தை ஜி.பி.எஸ் கருவி மூலம் வரைபடத்தில் ஏற்படுத்துவதுதான் இந்தக் கலை. 


காதல்

இதைப் பலர் செய்து வருகின்றனர். பொது விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த எனப் பலர் இதுபோன்று செய்வதுண்டு. இதுதொடர்பாகத் தெரிந்துகோண்ட யாஸ்ஸன் டகாஹஷி, இதன் மூலம் ப்ரப்போஸ் செய்வது என முடிவு செய்தார். இந்த டெக்னாலஜி காதல் கதையைக் கூகுள் ஷேர் செய்துள்ளது. ஜப்பான் முழுவதும் பயணித்து அதன்மூலம் மேரி மீ? (Marry me) என்னும் வாசகத்தைக் கூகுள் எர்த் மூலம் உருவாக முடிவு செய்து பயணத்துக்குத் தயாரானார். முதல் வேலையாகத் தனது வேலையை விட்டார். ககோஷிமா கடற்கரையிலிருந்து தனது பயணத்தைக் காரில் தொடங்குகிறார் யாஸ்ஸன். ஆறு மாதங்களில் சுமார் 7,000 கிலோமீட்டர்கள் பயணம் செய்தார். முடிவில் தனது பயண விவரத்தைக் கூகுள் ஏர்த் ஆப் மூலம் தோழி நாட்சுகியிடம் காட்டியுள்ளார். அதில் Marry me என்றும் இறுதியில் ஒரு ஹார்ட் வடிவமும் வந்தது. 

காதல் ஜோடி

ஜி.பி.எஸ் ஆர்ட்டில் இது மிகப்பெரிய ஓவியமாகும். இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள். அதில் யாஸ்ஸன், ``என் தோழிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்தேன். அதனால் ஜப்பானின் தீவுகளுக்குப் பயணிப்பது என முடிவு செய்து தொடங்கினேன். கூகுள் மேப்பில் எனது பயணங்களைத் திட்டமிட்டேன். வேலையைத் துறந்தேன். அதுவரை நான் டோக்கியோ நகரை விட்டு வெளியே போனது கிடையாது. புத்தகங்களில் மட்டுமே கிடைத்த அனுபவம் நேரடியாகக் கிடைத்தது. 

 

மழையில் யாஸ்ஸன்

இரவுகளில் காரிலேயே தூங்குவேன். பல்வேறு இடங்களில் விதவிதமான உணவுகளைச் சாப்பிட்டேன். இந்தப் பயணத்தில் நான் கடுமையான மழை, கடும் பனி, நிலநடுக்கம் என அனைத்து விதமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டேன். ஆனால், கொண்ட முயற்சியால் பின் வாங்குவதில்லை என்பதில் மட்டும் தெளிவாக இருந்தேன். ரிலாக்ஸுக்கும் நேரம் கிடைத்தது. எனது பயணத்தை முடித்த பின்னர் ஜி.பி.எஸ் தகவல்களைக் கூகுள் எர்த்தில் பதிவேற்றினேன். அதைத் தோழியிடம் காட்டினேன்” என்றார். 

 

யாஸ்ஸன் நாட்சுகி

இதைப் பார்த்ததும், ``இவன் என்னை விட்டுவிட்டு தனியாக எங்கு செல்கிறான் என எண்ணிக்கொண்டே இருந்தேன்” என்றார். எல்லாம் சரி, ப்ரப்போஸலுக்கு என்ன சொன்னீர்கள் நாட்சுகி....? “கண்டிப்பாக யெஸ்தான்” என்கிறார் புன்னகையுடன்..!