`டவுண்லோடு செய்தால் சிறை... 5 மணிக்கே டோரென்ட்டில் தேடிய இந்தியர்கள்!' - GoT முதல்நாள் சுவாரஸ்யங்கள் #Gameofthrones | Google trend results show the most number of searches related to Game of Thrones torrent download

வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (15/04/2019)

கடைசி தொடர்பு:10:17 (16/04/2019)

`டவுண்லோடு செய்தால் சிறை... 5 மணிக்கே டோரென்ட்டில் தேடிய இந்தியர்கள்!' - GoT முதல்நாள் சுவாரஸ்யங்கள் #Gameofthrones

கேம் ஆஃப் த்ரோன்ஸ்

வின்டர் இஸ் ஹியர் பாஸ்...'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கிறார்கள். இரண்டு வருட காத்திருப்புக்குப் பின்னர், இன்று கேம் ஆஃப் த்ரோன்ஸ்  இறுதி சீஸனின் முதல் எபிஸோடு ஒளிபரப்பானது. இந்தியாவில், இன்று காலை  6.30 மணிக்கு வெளியான  படத்தைப் பார்க்க, இரவே அலாரம் வைத்துப் பலர் எழுந்துவிட்டார்கள். ஆனால், ஆச்சர்யப்படும் விதத்தில் அதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே பலர் எழுந்து, கூகுளில் இதைப் பற்றி தேடியிருக்கிறார்கள். கேம் ஆஃப் த்ரோன்ஸைப் பார்க்க அவ்வளவு ஆர்வமா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. அவர்கள் யாருமே சீரியலை எங்கே போய் பார்க்கலாம் எனத் தேடவில்லை. மாறாக, டோரென்ட்டில் முதல் எபிஸோடை எப்படி டவுண்லோடு செய்யலாம் என்பதைத் தேடியிருக்கிறார்கள். இந்தியாவில் HBO நிறுவனம் ஹாட் ஸ்டாருடன் இதை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், ஹாட் ஸ்டாரில் பார்ப்பவர்களைவிடவும் டோரென்ட்டில் டவுண்லோடு செய்துபார்க்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை கூகுளின் தேடல் முடிவுகளும் காட்டுகின்றன.

கூகுள்

அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை Torrent file என்பது 'Hotstar' என்பதை விடவும் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது. மேலும், அது தொடர்பான வார்த்தைகளையும் இந்தியர்கள் அதிக அளவில் தேடியிருக்கிறார்கள். கூகுளில் மட்டுமின்றி, இன்றைக்கு டோரென்ட் தளங்களிலும் அதிகமாக இதுவே அதிக அளவில் தேடப்பட்டுவருகிறது. உலகில், திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நிலைமை இப்படியென்றால், ஆஸ்திரேலியாவில் இதுபோல முறைகேடான வழியில் கேம் ஆஃப் த்ரோன்ஸை டவுண்லோடு செய்து பார்ப்பவர்களுக்கு சிறைத் தண்டனை காத்திருக்கிறது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

GoT

அந்நாட்டில், சர்வே நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றில், 30 சதவிகிதம் பேர் கேம் ஆஃப் த்ரோன்ஸை டவுண்லோடு செய்துதான் பார்ப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஏழாவது சீஸனை 1.77 மில்லியன் பேருக்கு மேல் சட்டவிரோதமாக டவுண்லோடு செய்ததாக ஒரு ஆய்வில் தெரியவந்தது. அதன் பின்னர், திருட்டைத் தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அதன்பின்னர், சட்டவிரோத டவுண்லோடுகள் 29 சதவிகிதத்தில் இருந்து 19 சதவிகிதமாகக் குறைந்தன.

GoT

"இது, வெறும் வருமானத்தைப் பற்றியது மட்டுமல்ல, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகள் மீதான முதலீட்டையும் குறைத்துவிடும்" என்று  ஆஸ்திரேலியாவின் கிரியேட்டிவ் கன்டென்ட் நிர்வாக இயக்குநர் லோரி  பிளெக்ஸர் என்பவர் தெரிவித்திருக்கிறார். முறைகேடான வழிகளில் கேம் ஆஃப் த்ரோன்ஸை டவுண்லோடு செய்பவர்கள் பிடிபட்டால், அவர்கள் சிறை செல்ல நேரலாம் என்ற ரீதியில் ஆஸ்திரேலியாவில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் Foxtel நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற டோரென்டுகளில் மால்வேர்கள் புகுத்தப்பட்டிருப்பதால், கணினிகள் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன என Kaspersky நிறுவனம் தெரிவித்துள்ளது.