`கூகுள், ஃபேஸ்புக்குக்கு உங்களைப் பற்றி எவ்வளவு தெரியும்?’ செக் பண்ணிக்குங்க! #VikatanInfographic | Tech companies and their tracking information

வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:46 (16/04/2019)

`கூகுள், ஃபேஸ்புக்குக்கு உங்களைப் பற்றி எவ்வளவு தெரியும்?’ செக் பண்ணிக்குங்க! #VikatanInfographic

கேட்ட போதெல்லாம், கேட்கும் தகவல்களை இந்நிறுவனங்களிடம் பகிர்ந்திருக்கிறோம். தற்போது அவர்களுக்கு நம்மைப் பற்றி என்னவெல்லாம் தெரியும்?

`கூகுள், ஃபேஸ்புக்குக்கு உங்களைப் பற்றி எவ்வளவு தெரியும்?’ செக் பண்ணிக்குங்க! #VikatanInfographic

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சி நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதுதான். ஆனால், அது பாதுகாப்பானதா என்பதுதான் பெரும் கேள்விக்குறி. அதிகரித்து வரும் செல்போன் பயன்பாடு, அதிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு பல்வேறுவிதங்களில் நன்மையாக இருந்தாலும், அதில் சில சிக்கலும் சேர்ந்தே வருகிறது. அதில் ஒன்று, நம் டேட்டா தவறாகக் கையாளப்படுவது. டெக் நிறுவனங்களின் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்துவதற்காக, பலமுறை அவர்கள் கேட்ட தகவல்களையெல்லாம் கொடுத்திருக்கிறோம். இப்போது அவர்களிடம் நம்மைப் பற்றிய என்னென்ன டேட்டாவெல்லாம் இருக்கிறது தெரியுமா? இந்த டெக் நிறுவனங்களுக்கு நம்மைப் பற்றி என்னவெல்லாம் தெரியும்? ஒரு செக்லிஸ்ட்.

கூகுள், ஃபேஸ்புக்கிற்கு உங்களைப் பற்றி எவ்வளவு தெரியும்?

ஃபேஸ்புக்:

உலகம் முழுவதும் 230 கோடிக்கும் அதிகமானவர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்திவருகின்றனர். நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக் செயலிக்கு நம்மைப் பற்றி என்னவெல்லாம் தெரியும்? 

உங்களின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, இருப்பிடத்தில் தொடங்கி உங்கள் மொபைலில் உள்ள புகைப்படம், வீடியோ, உங்கள் மொபைல் கேமரா, போன் கான்டாக்ட், கால் ஹிஸ்டரி, சாட் ஹிஸ்டரி உட்படப் பலவற்றை ஃபேஸ்புக்கால் கண்காணிக்க முடியும். 

கூகுள்:

நாள் ஒன்றுக்குக் கூகுளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 350 கோடிக்கும் அதிகம். நம் அனைவரின் மொபைல் போன்களிலும் கூகுள் நிறுவனத்தின் செயலிகளை வைத்திருக்காதவர்கள் யாரும் இல்லை. இந்தச் செயலிகள், உங்களின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, இருப்பிடம், மொபைலில் உள்ள புகைப்படம், வீடியோ, போன் கான்டாக்ட், பிரவுசிங் ஹிஸ்டரி, பார்த்த வீடியோக்களின் ஹிஸ்டரி, நாம் பயன்படுத்தும் சாதனம், IP அட்ரஸ், மொபைல் ஸ்டோரேஜ் என்று பல தகவல்களை நம்மிடம் சேகரித்திருக்கிறது.

ட்விட்டர்:

35 கோடிக்கும் அதிகமானவர்கள் உலகம் முழுவதும் ட்விட்டர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலி, உங்களின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, இருப்பிடம், பயன்படுத்தும் சாதனம், IP அட்ரஸ், உங்களின் கிரெடிட் கார்டு விவரம் என்று பல விவரங்களை பெற்றுக்கொள்கிறது.

வாட்ஸ்அப்:

180 நாடுகளில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 150 கோடிக்கும் அதிகம். நாளுக்கு நாள் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தச் செயலி, உங்களின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, இருப்பிடம், பயன்படுத்தும் சாதனம், IP அட்ரஸ், மொபைல் ஸ்டோரேஜ், போன் கான்டாக்ட், சாட் ஹிஸ்டரி போன்ற விவரங்களை சேகரித்து வைத்திருக்கிறது.

இவைதவிர இன்னும் எத்தனை எத்தனை செயலிகள் நமக்கு தெரிந்தும், தெரியாமலும் நம் தகவல்களை உருவிக்கொண்டிருக்கின்றன. இவையனைத்துமே பாதுகாப்பான முறையில்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

இதற்குத் தீர்வு என்ன? 

ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதை உங்களின் மொபைலில் இன்ஸ்டால் செய்யும்பொழுது அந்தச் செயலி கேட்கும் அனுமதியை நாம் என்றாவது படித்ததுண்டா, அதில் என்னென்ன அனுமதி கேட்கிறது என்று தெரிந்துகொண்டதுண்டா? அப்படித் தெரியாமல் நாம் கொடுக்கும் அனுமதிதான் அந்தச் செயலி நமக்கே தெரியாமல் நம்மைக் கண்காணிக்கவும், தகவல்களை சேகரிக்கவும் வழிவகை செய்கிறது. 

ஒரு செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யும்பொழுது உங்களுக்கு நீங்களே இந்தக் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.

  • அந்தச் செயலியை எதற்காக நீங்கள் இன்ஸ்டால் செய்யப்போகிறீர்கள்?
  • அந்தச் செயலியை நாம் கடைசியாக எப்போது பயன்படுத்தினோம்?
  • அந்தச் செயலி நமக்குப் பயனுள்ளதா?
  • அந்தச் செயலி நம்மைப் பற்றிய எந்தெந்த தகவல்கள் மற்றும் விவரங்களை அணுக அனுமதி கேட்கிறது?
  • அந்தச் செயலியின் தனியுரிமைக் கொள்கை என்ன?

ஏற்கெனவே இன்ஸ்டால் செய்த செயலிகளின் செயல் குறித்துத் தெரிந்துகொள்ள, உங்களது மொபைலில் அப்ளிகேஷன் செட்டிங்கில், ஆப் பெர்மிஷன் சென்று எந்தெந்தச் செயலியால், எந்தெந்த விவரங்களைக் கண்காணிக்க முடியும் என்பது குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள். தேவையில்லாத செயலிகளை நீக்கிவிடுங்கள். எப்போதும் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் போன்றவற்றிலிருந்து மட்டுமே ஆப்களை டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள்.


டிரெண்டிங் @ விகடன்