`மனித திசுக்களாலான முதல் 3டி இதயம்` - இஸ்ரேல் அறிவியலாளர்களின் புதிய சாதனை | Israeli researchers just printed the world's first 3D heart

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (16/04/2019)

கடைசி தொடர்பு:14:15 (16/04/2019)

`மனித திசுக்களாலான முதல் 3டி இதயம்` - இஸ்ரேல் அறிவியலாளர்களின் புதிய சாதனை

இன்று மனிதன் தன் சாதாரண தேவை உட்பட அனைத்துக்கும் இயந்திரத்தையும், செயற்கையையுமே அதிகம் நம்பி ஓடத்தொடங்கிவிட்டான். இப்படியிருக்க தற்போது மனித உறுப்புகளையும் செயற்கையான முறையில் தயார் செய்யும் புதிய முறையை இஸ்ரேல் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

3டி இதயம்

இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உலகிலேயே முதல்முறையாக 3டி அமைப்பிலான மனித இதயத்தை உருவாக்கியுள்ளனர். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது முற்றிலுமாக மனித திசுக்களை வைத்து, இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் மற்றும் இதய அறைகளுடன்  உருவாக்கப்பட்டுள்ளது. 

இதயம்

இந்த ஆராய்ச்சி முன்னதாகவே உலகம் முழுவதிலும் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதை இஸ்ரேல் அறிவியலாளர்கள் செய்து முடித்துள்ளனர். அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டல் டிவிர் (Tal Dvir) தலைமையில்தான் இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றுள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது, ``முன்னதாக பலர் 3டி வடிவமைப்பிலான இதயத்தை உருவாக்கியுள்ளனர் ஆனால், மனித திசுக்களின் மூலம் இதய பாகங்களை முற்றிலுமாக கொண்ட இதயம் உருவாக்கப்பட்டது இதுவே முதல்முறை.  தற்போது இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றதன் மூலம் இதே செயல் முறை வரும் காலத்தில் பிற உடல் உறுப்புகளையும் தயாரிக்க உதவும்.

ஆராய்ச்சி

ஒருவருக்கு இதயக் குறைபாடு ஏற்பட்டுள்ளது அவருக்கு வேறு இதயம் பொருத்த வேண்டும் என்றால் நாம் அதே ரத்த வகையைக் கொண்ட ஒருவரைத் தேடி அவரின் இதயம் நோயாளிக்குப் பொருந்துமா எனப் பார்த்த பிறகுதான் இதய மாற்று சிகிச்சை நடைபெறும். ஆனால், தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த 3டி இதயம் மனித திசுக்களால் உருவாக்கப்பட்டது. ஒருவருக்கு இதயம் தேவைப்பட்டால் அவரின் திசுக்களைக் கொண்டு அவருக்குத் தேவையான அளவில் புதிய இதயத்தை உருவாக்கலாம். அடுத்தபடியாக 3டி இதயத்தைச் செயல்படவைக்கும் முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த 3டி இதயம் நிச்சயமாக மனித உடலுக்குள் பொருத்தப்படும் ” எனக் கூறியுள்ளார்.