இப்படியொரு சமையல் வீடியோவை இதுவரை பார்த்திருக்க மாட்டீங்க! - வாவ் சொல்லவைக்கும் சீனப் பெண் | Have you watch this Chinese girl's cookery video

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (16/04/2019)

கடைசி தொடர்பு:15:20 (16/04/2019)

இப்படியொரு சமையல் வீடியோவை இதுவரை பார்த்திருக்க மாட்டீங்க! - வாவ் சொல்லவைக்கும் சீனப் பெண்

டியான்சி சியாஜ்ஜியைத் தெரியுமா உங்களுக்கு? அதென்ன, சைனீஸ் ரெசிப்பியா என்கிறீர்களா... விடைக்கு மிக அருகில் வந்துவிட்டீர்கள் என்றுதான் சொல்வேன். அழகான சீனா, அட்டகாசமான கிராமத்து வீடு,அமைதியான முகம், தோட்டத்தில் விளைவதைப் பறித்து செய்யப்படும் சமையல், அலட்டிக்கொள்ளாத உடல்மொழி, சமைத்ததும் தன் குடும்பத்தினருடன் உட்கார்ந்து சாப்பிடும் அந்தப் பெண், டியான்சியின் சமையல் வீடியோ ஒவ்வொன்றும் லட்சம் வியூவர்ஸ்களால் பார்க்கப்படுகிறது. சீன இளம்பெண்தான் டியான்சி சியாஜ்ஜி  ( Dianxi Xiaoge). சென்ற வருடம்  ஜூலையில்தான் தன்னுடைய பாரம்பர்ய சமையல் வீடியோக்களை அப்லோடு செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதற்குள் 32 கோடிக்கும் மேல் வியூஸ், கிட்டத்தட்ட 2 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்  என்று ஃபுட் பிளாக்கர்களையெல்லாம் புருவங்களை உயர்த்தவைத்திருக்கிறார்  டியான்சி. 

டியான்சி

தென் மத்திய சீனாவில் இருக்கிற யுன்னன் என்ற மாகாணத்தைச் சேர்ந்த டியான்சி, தன்னைப் பற்றி சொல்கையில், ''ஐ யம்  எ லோக்கல் யுன்னன் கேர்ள். எனக்கு நெருக்கமானவர்கள் என்னை 'ஆபன்ச்சி' என்று அழைப்பார்கள். என் மாகாணத்தின் புகழ்பெற்ற உணவுகளைத்தான் வீடியோக்களில் பார்க்கிறீர்கள்'' என்கிறார். 

தாத்தா, பாட்டி,  தம்பி, அம்மா, அப்பா, கிழங்கு, கீரை பறிக்கப்போகும்போது உடன் துணைக்குப் போகும் நாய், வீடியோக்களில் அடிக்கடி தலைகாட்டி கறித்துண்டுகளை வாயால் கேட்ச் பிடிக்கும் பூனை என்று  தன் அன்பான குடும்பத்துடன் வசித்துவருகிறார் டியான்சி. நம் கண் முன்னால் காட்டில் இருந்து பறித்து வந்த தக்காளியில் சாஸ், தோட்டத்தில் இருந்து பறித்துவந்த ரோஜாப் பூக்களை உதிர்த்து குல்கந்து என்று வெஜிடேரியனை ரசிக்கவைப்பவர், பன்றியின் ஈரலிலும் முழுப் பாம்பை தோலுரித்தும் அவற்றின் மேல் இடித்த மிளகாய்ப்பொடியைத் தடவி, வீட்டு வாசலில் உப்புக்கண்டமாக்கிக் காயவும் விடுவார். ஒரு தடவை தன் தாத்தாவுக்காக இவர் தயாரித்த ஹோம்பர்கர் வீடியோ, செம டேஸ்ட்டி ஹிட். டியான்சியின் வீடியோ ஹிட்டுக்கு முதல் காரணம், அவருடைய கடின உழைப்பு. பேசவே செய்யாமல் தன்னுடைய வேலையை மட்டும் செய்யும் டியான்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்... அவர் செய்யும் சமையலையும்தாம். மொழியும் தெரியவில்லை, அவர் செய்கிற ரெசிப்பியையும் அப்படியே நம் வீட்டில் செய்ய முடியாது. ஆனா, மொழி இல்லாமலேயே உழைப்பால் பல மனங்களை வெல்ல முடியும் என்பதைத் தன் ஒவ்வொரு வீடியோவிலும் காட்டுகிறார் டியான்சி

டியான்சியின் வீடியோவைப் பார்ப்பதற்கு மொழி ஒரு தடையே கிடையாது. வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தால், புதுவிதமான அந்த ரெசிப்பிகளின் தயாரிப்பை நாவூற பார்த்துக்கொண்டே இருக்கலாம்.