`மரண ஓலம் 10 நிமிடம் வரை கேட்டது!' - பந்தயத்தில் தோத்த புறாக்களுக்கு நடந்த கொடுமை | Several captive pigeons burnt alive, simply for losing a race in pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (16/04/2019)

கடைசி தொடர்பு:15:55 (16/04/2019)

`மரண ஓலம் 10 நிமிடம் வரை கேட்டது!' - பந்தயத்தில் தோத்த புறாக்களுக்கு நடந்த கொடுமை

பாகிஸ்தானில், பந்தயத்தில் தோற்ற புறாக்களை எரித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புறாக்களின் மரண ஓலம் 10 நிமிடம் வரை கேட்டதாக அக்கம்பக்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். 

எரித்துக்கொல்லப்பட்ட புறாக்கள்

பாகிஸ்தானில், புறா பந்தயம் நிறையவே பாப்புலர். ஏராளமானோர் பந்தயங்களில் வெறியுடன் கலந்துகொள்கிறார்கள். இதற்காக, லட்சக்கணக்கில் பணம் செலவழித்து புறாக்களை வளர்ப்பதுடன், பந்தயத்திலும் பங்கேற்கவைக்கின்றனர். சமீபத்தில், பைசலாபாத் நகரில் பந்தயம் நடைபெற்றது.  பந்தயத்தில் பங்கேற்ற ஒருவர், தோற்ற புறாக்களைக் கூண்டுக்குள் அடைத்துவைத்து தீ வைத்தார்.  இதில்,           20- க்கும் மேற்பட்ட புறாக்கள் பரிதாபமாக இறந்தன. தீயில் சிக்கிய அவற்றின்  மரண ஓலம், தங்களை மிகவும் பாதித்ததாக அக்கம் பக்கத்தினர் வேதனைப்பட்டனர். பறவைகள் தீயில் கருகிக் கிடப்பதைப் படம்  எடுத்து  ஷாகீத் பஷ்கீத் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள்,  'ஏற்றுக்கொள்ளவே முடியாத செயல்'  என உரிமையாளரைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். 

ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பறவையின் ஆர்வலர்  ஒருவர், பாகிஸ்தானில்  பந்தயங்களில் பங்கேற்கும் உரிமையாளர்களுக்கு, புறாக்களின் மதிப்பு தெரியாது. பறவை இனங்களில், குறித்த இடத்துக்கு குறித்த நேரத்தில் சென்றடையும் திறன் புறாக்களுக்கு உண்டு. சுமார்  12 மணி நேரத்துக்கு மேல் நிற்காமல் பறக்கும் திறன் கொண்டவை. வெயிலையும் தாங்கிக்கொண்டு எங்கும் நிற்காமல், எதுவும் சாப்பிடாமல் இலக்கை நோக்கி பறப்பவை. நல்ல புறா ஒன்று லட்சக்கணக்கான விலையுடையது.  பாகிஸ்தானியர்களுக்கு பல மாதங்களுக்கான  மாதச் சம்பளம் இது.  பாகிஸ்தானில் பறவை, கால்நடைகளைக்  கொடுமைப்படுத்துபவர்களுக்குத் தண்டனை வழங்க  சட்டத்தில் வழிவகை இல்லாததும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் காரணமாக உள்ளன''  என்றார். 

பாகிஸ்தானில், விலங்குகளும் பறவை இனங்களும் கொடூரமாகக் கொல்லப்படுவது வாடிக்கைதான். விலங்குகள் நல அமைப்பின் செயல்பாடு அந்நாட்டில் சுத்த மோசம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க