`40 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன!' - ஜூலியன் அசாஞ்சே கைதால் அலறும் ஈக்வடோர் | Ecuador says webpages Hit By 40 Million Cyber-Attacks after the Arrest of Julian Assange

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:30 (16/04/2019)

`40 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன!' - ஜூலியன் அசாஞ்சே கைதால் அலறும் ஈக்வடோர்

ஜூலியன் அசாஞ்சே

லண்டனில் உள்ள ஈக்வடோர் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, கடந்த வாரம் வியாழக்கிழமையன்று லண்டன் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். அவரை விடுதலைசெய்ய வேண்டும் என உலகம் முழுவதும் பலர் குரல்கொடுத்துவருகிறார்கள். ராணுவம் தொடர்பான பல ரகசியத் தகவல்களை வெளியிட்டதன் காரணமாக இவரை அமெரிக்கா கைதுசெய்ய முயற்சிசெய்துவந்தது. அதோடு, ஸ்வீடனில் பாலியல் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதால், அசாஞ்சே எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையில், கடந்த வாரம் அவருக்கான ஆதரவை ஈக்வடோர் தூதரகம் விலக்கிக்கொண்டது. அதன் பின்னரே அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், இதற்குப்பின் ஈக்வடோர் அசாஞ்சேவுக்கு ஆதரவு அளிக்காது என்றே தெரிகிறது.

ஈக்வடோர்

அசாஞ்சேவுக்கு எதிராகத் தொடர்ந்து எடுத்துவரும் இதுபோன்ற நடவடிக்கைகளால், தற்போது புதிய சிக்கல் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறது ஈக்வடோர். அவர் கைதுசெய்யப்பட்ட நாள் முதல் பொதுத்துறை நிறுவனங்களின் இணையப் பக்கங்கள் மீது நடைபெற்ற சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, அந்நாட்டின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் துறையின் துணை அமைச்சர் பாட்ரிசோ ரியல் (Patricio Real) தெரிவித்துள்ளார்.

Julian Assange

அமெரிக்கா, இங்கிலாந்து  ஜெர்மனி,ருமேனியா,பிரான்ஸ்,ஆஸ்திரியா, பிரேசில் மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகளிலிருந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சகம்,வங்கிகள், அதிபர் அலுவலகம்,பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் இணையப் பக்கங்கள், இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்துக்கும் காரணம் ஜூலியன் அசாஞ்சேவுக்கு நெருக்கமான குழுக்கள்தான் எனவும் அந்நாடு குற்றம் சாட்டியிருக்கிறது.