பிளாஸ்டிக்கைவிட அதிகம் கடலில் கலக்கும் சிறிய பொருள்?- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் | Cigarette filters are ocean's largest source of trash

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (16/04/2019)

கடைசி தொடர்பு:17:25 (16/04/2019)

பிளாஸ்டிக்கைவிட அதிகம் கடலில் கலக்கும் சிறிய பொருள்?- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

தற்போதைய காலகட்டத்தில், கடல் நீர் மாசுபடுவது மிகப்பெரும் பிரச்னையாக வளர்ந்துவருகிறது. இதைத் தடுக்க, உலக நாடுகள் பலவும் பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றன. கடலில் கலக்கும் பொருள்கள் என்றால், நம் நினைவுக்கு முதலில் வருவது பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை மட்டும்தான். ஆனால், இதைவிட மிகச் சிறிய ஒரு பொருள்தான் கடலை அதிகமாக ஆக்கிரமித்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா.

கடல்

ஆம், பலரும் பயன்படுத்திவிட்டு தூக்கிஎறியும் சிகரெட் துண்டுகள்தான் அவை. அவை, பார்ப்பதற்கு மிகவும் சிறியதாகவும் பாதிப்பு ஏற்படுத்தாதவையாகவும் இருக்கலாம். ஆனால், பிற பொருள்களைவிட இவைதான் அதிக அளவிலும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

அரசு சாரா கடல் பாதுகாப்பு அமைப்பு, கடந்த 1980-ம் ஆண்டு முதல் கடலில் கலக்கும் சிகரெட் துண்டுகளைச் சேகரித்துவந்துள்ளது. தற்போது வரை, சுமார் 60 மில்லியன் துண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  கடல் பரப்பில் பயன்படுத்தப்படும் சிகரெட் , ஆறுகளின்மூலம் கடலில் வந்து கலக்கும் சிகரெட் எனப் பல வழிகளில் சிகரெட் துண்டுகள் கடலில் கலக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கடல் பகுதிகளில் நேரடியாகக் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் அந்த அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர். 

சிகரெட் துண்டுகளைத் தூக்கி எரிந்தால் எளிதில் மக்கிவிடும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், அதன் அடிப்பகுதியில் செல்லுலோஸ் அசிடேட் என்ற பிளாஸ்டிக் பொருள் வைக்கப்பட்டுள்ளது. இது,  மக்குவதற்குப் பல வருடங்கள் ஆகும். இந்த பிளாஸ்டிக், மனிதர்கள் மற்றும் உயிரினங்களுக்கு பல்வேறு வகையில் தீங்கு விளைவிக்கக்கூடியது. சிகரெட் பிடிப்பதினால், அதை உபயோகப் படுத்துபவரில் தொடங்கி எதற்கும் சம்பந்தமில்லாத உயிரினங்கள் வரை அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.