`ஃபிளைட்டு நல்லபடியா போகணும்' - பயணிகளை அலறவைத்த சீன மூதாட்டியின் செயல்! | passenger throws coins at a plane's engine to pray for a safe flight

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (16/04/2019)

கடைசி தொடர்பு:18:58 (16/04/2019)

`ஃபிளைட்டு நல்லபடியா போகணும்' - பயணிகளை அலறவைத்த சீன மூதாட்டியின் செயல்!

சீனாவில்  66 வயது மூதாட்டி ஒருவர் விமான இயந்திரத்தில் நாணயங்களை வீசியதால் அந்நாடு காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

சீனாவின் இன்னர் மங்கோலியாவில் உள்ள ஹோஹோட் பைட்டா சர்வதேச விமான நிலையத்தில் (Hohhot Baita International ) இருந்து சிஃப்பெங் (Chifeng city) நகரை நோக்கிச் செல்வதற்காக இன்று காலை டியான்ஜின் ஏர்லைனை (Tianjin Airlines) சேர்ந்த விமானம் ஒன்று தயாராக இருந்தது. அதில் சுமார் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்க இருந்தனர்.

அனைவரும் விமானத்தில் ஏறிக்கொண்டிருக்கும்போது அவர்களுடன் 66 வயதான யாங் என்ற மூதாட்டியும் ஏறியுள்ளார். அவர் விமானத்தில் உள்ள இயந்திரத்தில் பல சீன நாணயங்களை வீசியுள்ளார். இதை அருகில் இருந்த பணியாளர்கள் பார்த்துவிட்டு அந்த மூதாட்டியைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர், காவலர்களும் மூதாட்டியைக் கைது செய்தனர்.

விமானம்

இதற்கிடையில் விமானப் பணியாளர்கள் இயந்திரத்தில் நடத்திய சோதனையில் அதனுள் ஆறு சீன நாணயங்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த நாணயம் மட்டும் இயந்திரத்தில் சிக்கியிருந்தால் விமானம் நடு வழியில் நின்றிருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என விமான நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பின்னர் விமானத்தை இயக்காமல் சுமார் இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பிறகு, மற்றொரு விமானத்தில் அனைத்து பயணிகளையும் ஏற்றி அனுப்பியுள்ளது ஏர்லைன்ஸ் நிறுவனம்.

இதைத்தொடர்ந்து எதற்காக விமான இயந்திரத்தில் நாணயங்களை வீசினார் என அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு ‘விமானப் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவே இயந்திரத்தில் நாணயங்களை வீசினேன்’ எனத் தெரிவித்துள்ளார். அந்த மூதாட்டியைக் கைது செய்ததோடு மட்டுமில்லாமல் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.