``யார் இவர்கள்?” - தேவாலய தீ விபத்துக்கு சற்றுமுன் எடுக்கப்பட்ட புகைப்படம் கொண்டு ட்விட்டரில் தேடும் அமெரிக்க பெண் | Viral picture caught near the fire accident in church

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (17/04/2019)

கடைசி தொடர்பு:10:44 (17/04/2019)

``யார் இவர்கள்?” - தேவாலய தீ விபத்துக்கு சற்றுமுன் எடுக்கப்பட்ட புகைப்படம் கொண்டு ட்விட்டரில் தேடும் அமெரிக்க பெண்

பாரீஸ் நகரின் புகழ்பெற்ற தேவாலயம் நோட்ரே டேம். பிரான்ஸ் நாட்டின் முக்கிய இடங்களில் ஒன்றாகக் கருதப்படுவதும், அந்நாட்டின் அடையாளமாகவும் விளங்கும் 850 வருட பாரம்பர்யம் மிக்க தேவாலயம். யுனெஸ்கோவின் உலக பாரம்பர்யச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்தத் தேவாலயத்தில் நேற்று முன்தினம்  மாலை அந்த கோர தீவிபத்து சம்பவம் நடந்தது. 

தீ விபத்து

இந்த தீவிபத்தில் தேவாலயத்தின் கூரை முழுவதுமாக சேதமடைந்தது. இந்த தேவாலயத்தைச் சரிசெய்யும் பணி உடனடியாக தொடங்கும் என்றும், இதற்காக நிதி திரட்டப்படும் என்றும் அறிவித்தார் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான். இதைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் பலர் மில்லியன் கணக்கில் பணம் வழங்க முன்வந்தனர். 

நோட்ரே டேம் தேவாலயம்

இந்த நிலையில், பாரீஸ் நகருக்கு வந்த புரூக் விண்ட்சர் என்ற அமெரிக்க பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், நோட்ரே டேம் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்படுவதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்று ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் குட்டிப் பெண் தன் தந்தையுடன் க்யூட்டாக விளையாடிக்கொண்டிருக்கிறார். பின்னணியில் கம்பீரமாக நிற்கிறது நோட்ரே டேம் தேவாலயக் கட்டடம். 

தீ

23 வயதான  புரூக் விண்ட்சர், ட்விட்டரில், ``இந்தப் புகைப்படத்தை நான் நோட்ரே டேமில் தீப்பிடிப்பதற்கு ஒருமணிநேரத்துக்கு முன்னால் எடுத்தேன். நான் கிட்டத்தட்ட அந்தத் தந்தையிடம் சென்று இந்தப் புகைப்படம் வேண்டுமா எனக் கேட்க நினைத்தேன். இப்போது அதை அவரிடம் கேட்க வேண்டும். ட்விட்டர், உங்களிடம் மேஜிக் இருந்தால், இவர்களைக் கண்டுபிடிக்க உதவுங்கள்” எனப் பதிவிட இந்தப் புகைப்படம் படு வைரல் ஆனது. 

வைரல் புகைப்படம்

இதுவரை இந்தப் புகைப்படத்தை சுமார் 1,91,540 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர். இது தொடர்பாக பிபிசி-யிடம் பேசிய புரூக் விண்ட்சர், `அவர்கள் தந்தை மகள் என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அது அக்குழந்தையின் மாமாவாக இருக்கலாம், சகோதரனாக இருக்கலாம், நண்பராகக் கூட இருக்கலாம். அவர்களைக் கண்டுபிடிக்கும்வரை அது தெரியப்போவதில்லை. ட்விட்டர்வாசிகள் இவர்களைக் கண்டுபிடிக்க எனக்கு உதவலாம். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், இந்தப் புகைப்படத்தை எனது பொக்கிஷ நினைவாக வைத்திருக்க விரும்புவேன். அவரும் அவ்வாறே விரும்புவார் என நினைக்கிறேன்” என்றார். 

ட்வீட்

மேலும் விபத்து தொடர்பாக பேசிய அவர், ``பாரீஸ் நகர மக்களைப் போன்று நாங்களும் நொறுங்கிய இதயத்துடன் அதைப் பார்த்துக்கொண்டு இருந்தோம்” என்றார். 
இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ட்விட்டர் பயனாளர்கள் சிலர் இந்தப் புகைப்படத்தை வரலாற்றுப் புகைப்படம் எனத் தெரிவித்துள்ளனர்.