2 லட்சம் தேனீக்கள் தப்பியது எப்படி?- தீயில் உருக்குலைந்த தேவாலயத்தில் நடந்த அதிசயம் #NotreDame | Bees living on Notre-Dame cathedral church roof survive blaze

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (20/04/2019)

கடைசி தொடர்பு:15:59 (20/04/2019)

2 லட்சம் தேனீக்கள் தப்பியது எப்படி?- தீயில் உருக்குலைந்த தேவாலயத்தில் நடந்த அதிசயம் #NotreDame

850 ஆண்டுகள் பழைமையான உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில், சமீபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும்.  தேவாலயத்தைச் சீரமைக்க 5 வருடங்கள் என அதிபர் மெக்ரான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தில் ஒரு அதிசயமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. 

நோட்ரே டேம்
 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள நோட்ரே-டேம் என்ற இடத்தில், உலகப் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயம்,  நாட்டின் வரலாற்றுச் சின்னமாக பார்க்கப்படுகிறது. அங்கு, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு, திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென தேவாலயம் முழுவதும் பரவியது. இதனால், தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதமடைந்து இடிந்துவிழுந்தன. அத்துடன், தேவாலயத்தின் 2 கோபுரங்களில் ஒன்று முற்றிலுமாகத் தீக்கிரையானது. தீ பிடித்ததும் எச்சரிக்கை ஒலி ஒலித்ததால், தேவாலயத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நேரில் வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். மிகுந்த வருத்தத்தைப் பதிவுசெய்த மெக்ரான், இன்னும் 5 வருடங்களில் தேவாலயம் சீரமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், முன்பைவிட அழகாகக் கட்டுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நோட்ரே டேம்
 

மிகப்பெரிய தீ விபத்தில் தேவாலயத்தின்  உள்ளே வைக்கப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முள் கிரீடம், கிங் லூயிஸ் IX அணிந்திருந்த துணி, செம்பு சிற்பங்கள்  உள்ளிட்டவை  பத்திரமாக இருந்தது அதிசயம்.  அதுமட்டுமில்லை, தேவாலயத்தின் மேற்கூரைமீது வசிக்கும் சுமார் 2,00,000 தேனீகள், தீயில் சிக்கிச் சிதைந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், அவை பத்திரமாக இருப்பதாக தேனீக்களைப் பராமரிப்பவர் தெரிவித்துள்ளார். இது, பிரான்ஸ் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தீ விபத்து நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு அவை ரீங்காரமிட்டு வெளியே வந்ததாம். 

தேனீக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பிரான்ஸ் அரசு 2013-ம் ஆண்டு, கத்தோலிக்க தேவாலயத்தின் மேற்கூரையில் தேனீக்களை வளர்க்க முடிவுசெய்தது. தேனீக்களைப் பராமரிக்க கீண்ட் என்பவரை நியமித்தது. கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கப்பட்ட தேனீக்கள், தீ விபத்தில் மொத்தமாகக் கொல்லப்பட்டிருக்கும் என உடைந்துவிட்டார். ஆனால், அவை மேற்கூரைக்குக் கீழே உள்ள  ஓர் இடத்தில் பதுங்கி உயிர் தப்பித்துள்ளன. கீண்ட் தேனீக்கள் இருந்த இடத்தைப் பார்வையிடச் சென்றதும், அவை ரீங்காரமிட்டுத் தங்கள் இருப்பை அவருக்குக் காட்டியுள்ளன.  'இது, பேரதிசயம்!' என கீண்ட் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார். 

இந்த நிகழ்வு பற்றிய உங்கள் கருத்தினை இங்கே பதிவு செய்யலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க