அடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்! | Another explosion reported at Dematagoda srilanka

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (21/04/2019)

கடைசி தொடர்பு:16:53 (21/04/2019)

அடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்!

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று காலை முதல் தற்போது வரை ஒன்பது இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இலங்கை

ஈஸ்டர் தினமான இன்று இந்திய நேரப்படி இன்று காலை 8:45 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தேவாலயத்தில் குண்டு வெடித்தது. இதைத்தொடர்ந்து நீர் கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம், மட்ட களப்பில் உள்ள ஒரு தேவாலயம் மற்றும் கொழும்புவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களான சங்கரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்புரி ஹோட்டல் ஆகிய ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த தாக்குதலினால் இதுவரை 150-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று பிற்பகல் தெஹிவாலா உயிரியல் பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏழாவதாக ஒரு குண்டு வெடித்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து  டெமெடகோடா என்ற இடத்தில் எட்டாவது குண்டும் அதனைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் டெமெடகோடா பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து மூன்று குண்டுகளும் வெடித்துள்ளது. இங்கு நடந்த தாக்குதலில் மூன்று காவலர்கள் உயிரிழந்துள்ளனர். 

கொழும்புவில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்வதால் அங்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. 12  மணிநேரத்துக்குப் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இலங்கையில் தாக்குதல் தொடர்பாக வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் உறுதியற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொடர் தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உள்நாட்டு போருக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்பட்டுள்ளது.  

தொடர் வெடிக்குண்டு தாக்குதலினால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளையும் நாளை மறு தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகங்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு கொழும்புவில் இருந்து வெளியில் செல்லும் ரயில்கள் மற்றும் வெளியில் இருந்து கொழும்புவுக்குள் வரும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குண்டு வெடிப்பை அடுத்து நிலைமை கட்டுக்குள் வரும் வரை அனைத்து காவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.