`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே! | We will not tolerate such violence, such acts of terrorism says Mahinda Rajapaksa

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (21/04/2019)

கடைசி தொடர்பு:18:30 (21/04/2019)

`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே!

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அந்நாட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 207 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 பேர் வெளிநாட்டினர். மேலும் 450 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ``ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பெரும்பாலானவை தற்கொலைப் படை தாக்குதல்களே" என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே குண்டுவெடிப்பு சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதில், ``இது இலங்கைக்கான கறுப்பு நாள். புனித நாளைக் கொண்டாட வந்த இலங்கை மக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், எனப் பல இலங்கை மக்கள் இதில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு புனித நாளில், இப்படியான கொடூர தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்கு உரியது. தற்போது வரையில் இதற்கான காரணமான அமைப்பு, நபர்கள் யார் என யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இவை அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதம் மட்டுமே. இதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் வெகு விரைவில் தண்டிக்கப்படுவார்கள்.

ராஜபக்சே

இத்தகைய கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல்களை நாங்கள் ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மீண்டும் நாங்கள் ஒரு குரலாய் எழுவோம். தங்கள் சொந்தங்களைத் தொலைத்த குடும்பங்களுக்கும், இலங்கைக்கு விருந்தோம்பலாக வந்த நபர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க