`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்!’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம் | sri Lankan hotel manager remembers the last minutes of blast

வெளியிடப்பட்ட நேரம்: 20:07 (21/04/2019)

கடைசி தொடர்பு:20:07 (21/04/2019)

`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்!’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்

இலங்கையின் கொழும்பு நகரில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 228 பேர் பலியாகியிருக்கிறார்கள். அவர்களில் 35 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். மேலும் 470க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இலங்கை வெடிகுண்டுத் தாக்குதல்

ஈஸ்டர் திருநாளில் 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கையை நிலைகுலையச் செய்திருக்கிறது. தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டல்களில் வெளிநாட்டு பயணிகளின் ஆதர்சமான சின்னாமன் கிராண்ட் ஹோட்டலும் ஒன்று. அந்த ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர்தான் என்கிறார்கள். 

இலங்கைக் குண்டுவெடிப்பு

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சின்னாமன் கிராண்ட் ஹோட்டல் மேனேஜர் ஒருவர் செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பியிடம் கூறுகையில், `காலை 8.30 மணி இருக்கும். ஈஸ்டர் விருந்துக்காக ஹோட்டலில் மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் கூடியிருந்தனர். அப்போது, பின்புறம் பேக் ஒன்றை வைத்திருந்த அந்த நபர் பொறுமையாக வரிசையில் காத்திருந்தார். விருந்து அளிக்கப்படும் இடம் வரை பொறுமையாக வந்த அவர், விருந்து பரிமாறப்பட இருந்த வேளையில் தனது பேக்கில் இருந்த வெடிபொருள்களை வெடிக்கச் செய்தார். இதையடுத்து, அந்த இடத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. 

இலங்கைக் குண்டுவெடிப்பு

விருந்தினர்களை வரவேற்கும் பணியில் இருந்த எங்களின் மேலாளர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த நபர் இறந்தநிலையில், அவரது உடல் பாகங்களை போலீஸார் சேகரித்திருக்கிறார்கள்’ என்று பதற்றத்துடன் நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த அந்த நபர், வியாபார நோக்கத்துக்காக வந்திருப்பதாகக் கூறி போலியான முகவரியுடன் ஹோட்டலில் செக் இன் செய்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு மிக அருகில் இருக்கிறது சின்னாமன் கிராண்ட் ஹோட்டல். குண்டுவெடிப்பை அடுத்த சில நிமிடங்களில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர்.
 


அதிகம் படித்தவை