`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்!’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட் | Trump's tweet about sri lankan serial blast

வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (21/04/2019)

கடைசி தொடர்பு:21:18 (21/04/2019)

`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்!’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்

இலங்கை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 138 மில்லியன் மக்கள் இறந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தவறுதலாக ட்வீட் செய்தார். பின்னர் அந்த ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 228 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 470க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் 3க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ட்ரம்ப்-பின் ட்வீட்

அந்தவகையில் ட்விட்டர் மூலம் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தாக்குதலுக்குக் கண்டனமும் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தவறுதலாகக் குறிப்பிட்டார். இலங்கையின் மொத்த மக்கள்தொகையே 21.44 மில்லியன்தான் என்றநிலையில், குண்டுவெடிப்புத் தாக்குதலில் 138 மில்லியன் பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. 

ட்ரம்பின் ட்வீட்டுக்கு விமர்சனம்

ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், `இலங்கையின் சர்ச்சுகள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் எப்போதும் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு நாட்டின் அதிபரே இதுபோன்ற தவறைச் செய்யலாமா என்கிற ரீதியில் நெட்டிசன்கள் விமர்சிக்கவே அந்த ட்வீட்டை ட்ரம்ப் நீக்கிவிட்டார்.