`தீவிரவாதிகளின் அடுத்தகுறி இந்த 5 இடங்களில்தான்!'- இலங்கையை அலர்ட் செய்யும் அமெரிக்கா | Terrorists continue plotting Sri Lanka attacks, warns US State Department

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (22/04/2019)

கடைசி தொடர்பு:15:55 (22/04/2019)

`தீவிரவாதிகளின் அடுத்தகுறி இந்த 5 இடங்களில்தான்!'- இலங்கையை அலர்ட் செய்யும் அமெரிக்கா

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீண்டும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இலங்கை

ஈஸ்டர் தினமான நேற்று இலங்கை மக்களுக்கு மறக்க முடியாத கறுப்பு நாளாக மாறியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவைச் சுற்றி 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் இதுவரை 290 பேர் இறந்துள்ளனர். 500-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது அந்நாட்டு மக்கள் சந்தித்த அதே துயரை தற்போது மீண்டும் எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 36 வெளிநாட்டவர்கள் இறந்துள்ளனர். இலங்கையில் நடந்த இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனங்களும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். 

இலங்கை

இந்த நிலையில், இலங்கையின் பல பகுதியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீண்டும் இதேபோன்ற தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘ தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. அவர்கள் சுற்றுலாத்தலங்கள், அரசுப் போக்குவரத்து வாகனங்கள், ஷாப்பிங் மால், ஹோட்டல்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தலாம்’ எனத் தெரிவித்துள்ளது. 

குண்டு வெடிப்புத் தாக்குதலால் இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக சமூகவலைதளங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தற்போது இலங்கைக்குச் சுற்றுலா சென்றுள்ள பிற நாட்டுப் பயணிகள் அவசர அவசரமாக அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் கிஷு கோம்ஸ் தெரிவித்துள்ளார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டல்கள் பலவும் வெறிச்சோடி காணப்படுவதாகவும் இதனால் இலங்கை அரசுக்கு ஐந்து சதவிகிதம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து குண்டு வெடிப்புத் தாக்குதல் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அந்நாட்டு அதிபர் மைத்ரிய பால சிறிசேன நியமித்துள்ளார். இக்குழுவில், இலங்கையின் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் ஜயமான்ன, காவல்துறை முன்னாள் அதிகாரி என்.கே.இலங்கக்கோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


அதிகம் படித்தவை