`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர் | Sometimes, it gets too much even for police scene of crime officials

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (22/04/2019)

கடைசி தொடர்பு:19:10 (22/04/2019)

`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்

இலங்கை தலைநகர் கொழும்பில் ஈஸ்டர் நாளான நேற்று மூன்று தேவாலயங்கள் மூன்று ஹோட்டல்கள், திருமண மண்டபம், மக்கள் வாழும் குடியிருப்பு ஆகிய எட்டு இடங்களில் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடைபெற்றது. இதில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

photo credit: @dharisha

இந்தத் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலினால் இலங்கை முழுவதும் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு இன்று இரவு 8 மணி முதல் காலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஈஸ்டர் திருநாளை விமரிசையாக கொண்டாட அதிகமான மக்கள் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் கூடினர். மகிழ்ச்சியுடன் பிரார்த்தனை செய்ய வந்த மக்களின் வாழ்வில் நேற்று ஒரு கறுப்பு நாளாக மாறியது. நீர்கொழும்பில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில்தான் அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். 

photo credit: @dharisha

அங்கு நடந்த ஒரு சோகமான சம்பவத்தை இலங்கையைச் சேர்ந்த தரிஷா (Dharisha) என்ற பத்திரிகையாளர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் `சில நாள்கள் இந்தப் பணியும் மிகவும் வலி நிறைந்ததாகவே இருக்கும். நீர்கொழும்பில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் இறந்தவர்களின் உடல் பாகங்கள், சதைகள், தலைமுடிகள் போன்றவை சிதறிக்கிடந்தன. இதுதான் நேற்று நடந்தவற்றிலேயே மிகவும் கொடூரமான தாக்குதல். சில சமயம் இது தைரியமான காவல்துறை அதிகாரிகளையும் கலங்கவைத்துவிடுகிறது. நேற்று தேவாலயத்தில் மீட்புப் பணியில் இருந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரி அங்கு சிதறிக்கிடந்த உடல்களைப் பார்த்துவிட்டு வெளியில் வந்து பெருமூச்சு விட்டு விட்டுக் கதறி அழுதார். பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு மீண்டும் உள்ளே சென்று தன் பணியைத் தொடர்ந்தார்.

photo credit: @dharisha

அதேபோன்று கத்துவாபாட்டியாவில் ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் பெரிய சவப்பெட்டிகள் முதல் சிறிய சவப்பெட்டிகள் வரை வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலும் சீல் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தங்களின் வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால், அவர்களின் வாழ்வில் அது ஒரு கனவாகவே முடிந்துவிட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.