``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது!” - கலங்கும் இலங்கை மக்கள் | People gathered at Sebastian's church to pay their respects in Colombo

வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (23/04/2019)

கடைசி தொடர்பு:10:31 (23/04/2019)

``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது!” - கலங்கும் இலங்கை மக்கள்

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று தேவாலயங்கள், மூன்று ஹோட்டல்கள், ஒரு திருமண மண்டபம் மற்றும் மக்கள் வாழும் குடியிருப்பு ஆகிய எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடைபெற்றது. இதில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தேவாலயம்

இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் 36 வெளிநாட்டவர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலையடுத்து அங்குத் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பதற்றம் நீடித்து வருகிறது. கொழும்பு முழுவதும் ஆங்காங்கே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தேவாலயம்

இந்நிலையில் குண்டு வெடிப்பை நேரில் பார்த்த சிலர் ஏ.எஃப்.பி ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட சாந்தா பிரசாத் என்பவர் பேசும் போது, `ஞாயிற்றுக் கிழமை கொச்சிக்கடை தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கிக் காயமடைந்த எட்டுச் சிறுவர்களை மீட்டு நான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவர்களில் இரண்டு பெண்கள் எட்டு மற்றும் ஆறு வயதுடையவர்கள். அந்தச் சிறுமிகளைப் பார்க்கும் போது என் பிள்ளைகள் போலவே இருந்தனர். அவர்களின் உடைகள் கிழிந்த நிலையில் முற்றிலும் ரத்தத்தில் நனைந்து காணப்பட்டது. இது தாங்க முடியாத வலியாக இருந்தது’ எனக் கூறியுள்ளார்.

இலங்கை

கொழும்புவில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் மாலதி விக்ரமா குண்டு வெடிப்பு பற்றிக் கூறியதாவது, `நாங்கள் தினமும் கொழும்புவின் அனைத்துச் சாலைகளையும் தூய்மை செய்வோம். ஆனால் இன்று எங்களால் வேலை செய்ய முடியவில்லை. குப்பைத் தொட்டிகளின் அருகில் செல்லவே அச்சமாக உள்ளது. சாலையில் எங்குக் கறுப்பு நிற பைகளைக் கண்டாலும் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை

`சின்னமன் கிராண்ட் ஹோட்டலில்தான் என் மருமகன் வேலை செய்து வந்தான். அவனுக்கு 23 வயது மட்டுமே ஆகிறது. அடுத்த வாரம் அவனுக்குத் திருமணம் நடைபெறவிருந்தது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. அவனின் இறப்பை எங்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என வேதனைப்படுகிறார் கொழும்பு டாக்ஸி ஓட்டுநர் இம்தியாஸ் அலி. 

இலங்கை

`இலங்கையில் நடந்த தாக்குதலில் மனித நேயமும் சற்று உயிர்த்தெழுந்துள்ளது. எட்டுத் தாக்குதல்களில் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளானது செபஸ்டியன் தேவாலயம்தான். அங்கு நேற்று காலை முதல் பொதுமக்கள் தாங்களாகவே வந்து தேவாலயத்தை தூய்மைப் படுத்தும் பணிகளைச் செய்து வருகின்றனர். புத்த துறவிகள், பொதுமக்கள் எனப் பலரும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒரு தாயும், மகனும் தேவாலயத்துக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாவலர்களுக்கு தேநீர் வழங்கினர்’ என சர்ச்சில் கருணாரத்னே என்ற 52 வயதான ஒருவர் கூறியுள்ளார். 

இலங்கை

`இப்போதெல்லாம் காலையில் நான் கண் விழிக்கும் போதே யாருக்கு உதவி செய்யலாம் என்ற எண்ணத்துடனேயே எழுகிறேன். குண்டு வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நான் அங்குச் சென்று பார்த்தேன் திரும்பிய இடமெல்லாம் மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இறந்தவர்களின் உடல்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் என் மூன்று குழந்தைகள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர். அவர்கள் என்னிடம் எங்கே கடவுள் எனக் கேட்கிறார்கள். என்னால் அவர்களின் கேள்விக்கு பதில் கூறமுடியவில்லை. மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் செல்லவே பயப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.