`கணவர், மகன்கள் ரூமில் இருக்க, மோனிகே மட்டும் சாப்பிடச் சென்றார்!'- இலங்கையில் உயிரிழந்த `டச்சு' பெண் | dutch woman died in sri lankan bomb blasts

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (23/04/2019)

கடைசி தொடர்பு:16:42 (23/04/2019)

`கணவர், மகன்கள் ரூமில் இருக்க, மோனிகே மட்டும் சாப்பிடச் சென்றார்!'- இலங்கையில் உயிரிழந்த `டச்சு' பெண்

10 ஆண்டுகளில் இல்லாத துயரங்களை இலங்கை சந்தித்து வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் ஈஸ்டர் நாளான நேற்று முன்தினம் 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள், திருமண மண்டபம், மக்கள் வாழும் குடியிருப்பு ஆகிய 8 இடங்களில் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடைபெற்றது. இதில் இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 36 வெளிநாட்டவர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் அழுகுரல் கேட்டு வருகிறது. தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யார் எனக் கண்டுபிடிப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் பலியானவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாட்டவர் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

டச்சு பெண்

இந்நிலையில், இந்தக் கொடூரத் தாக்குதலில் டச்சு பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மோனிகே என்னும் 54 வயதாகும் அந்தப் பெண் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் இலங்கையின் ரத்னபுராவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்காக `சிறுவர்கள் வார்டன்' பகுதியை இலவசமாகக் கட்டித்தர ரூ.4 கோடி வரைக்கும் நிதியுதவி செய்துள்ளனர். இதற்கான பணிகள் முடிந்த நிலையில் சமீபத்தில் அந்தக் கட்டடத்தை திறப்பதற்காகத் தன் கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் இலங்கை வந்துள்ளார். குண்டுவெடித்த 8 இடங்களில் ஒன்றான சின்னமன் கிராண்ட் ஹோட்டலில்தான் இவர்கள் தங்கியுள்ளனர். சம்பவத்தன்று மோனிகே கணவர் மற்றும் மகன்கள் ரூமில் இருக்க, அவர் மட்டும் உணவருந்தச் சென்றுள்ளார். அப்போதுதான் குண்டுவெடித்துள்ளது.

``மோனிகே குடும்பம் இலங்கைக்கு உதவி பண்ணுவது இது முதல் முறையல்ல. பலமுறை அவர்கள் இதுபோன்ற உதவிகளைச் செய்துள்ளார்கள். எப்போதும் அவர்கள் `இலங்கையின் நண்பர்கள்' என்றே தங்களைக் குறிப்பிடுவார்கள். இந்த முறை நேரில் சென்று கட்டடத்தைத் திறந்து வைக்கலாம் எனச் சென்றவர்களுக்கு ஏன் இப்படி நடந்தது எனத் தெரியவில்லை" என வருத்தம் தெரிவித்துள்ளனர் அவரது உறவினர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க