வெடிகுண்டுகளுடன் நுழைந்த லாரி, வேன்! - உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் கொழும்பு | All police stations in Colombo advised to be on high alert: police

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (23/04/2019)

கடைசி தொடர்பு:16:31 (23/04/2019)

வெடிகுண்டுகளுடன் நுழைந்த லாரி, வேன்! - உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் கொழும்பு

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் ஆகியவை கொழும்பு நகருக்குள் நுழைந்திருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு

ஈஸ்டர் தினத்தில் இலங்கையின் கொழும்பில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தேவாலாயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இலங்கையை நிலைகுலையச் செய்த இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தாக்குதல் சம்பவத்தை அடுத்து கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில், கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் ஆகியவை நுழைந்திருப்பதாக புலனாய்வுத் துறைக்குக் கிடைத்த தகவலால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பின் அனைத்து காவல்நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 

கொழும்பு

கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் உரிய சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், கொழும்பு துறைமுக வாயிலிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக இலங்கை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ரூவன் விஜயவர்த்தனே தெரிவித்தார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.