`உடனே அங்கு ஓடினேன், கண்ட காட்சியை என்னால் மறக்க முடியல!'- குண்டுவெடிப்பால் பதறிய இலங்கை வீரர் | Sri Lanka cricketer Dasun Shanaka shares about bomb blasts

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (24/04/2019)

கடைசி தொடர்பு:12:10 (24/04/2019)

`உடனே அங்கு ஓடினேன், கண்ட காட்சியை என்னால் மறக்க முடியல!'- குண்டுவெடிப்பால் பதறிய இலங்கை வீரர்

இலங்கை குண்டுவெடிப்பின்போது பார்த்த சம்பவங்கள்குறித்து பயம் தெரிவித்துள்ளார், கிரிக்கெட் வீரர் ஒருவர்.

இலங்கை குண்டுவெடிப்பு

இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 350-ஐ தொட்டுள்ளது. இன்னும் பலர் அபாயகட்டத்தில் சிகிச்சைபெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, 'தாக்குதல் தொடர்பாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம்' என ராணுவத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீட்டித்துவருகிறது. இந்நிலையில், தாக்குதலில் பலியானவர்களை நேரில் பார்த்தவர்கள், தங்கள் சோகக் கதைகளைப் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் தாசுன் ஷானகா, குண்டுவெடிப்பு தாக்குதலை நேரில் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

தாசுன் ஷானகா

அதில், ``நான் அடிக்கடி சர்ச்சுக்கு செல்லக்கூடியவன். ஆனால், அன்றைக்கு சோர்வாக இருந்ததால் சர்ச்சுக்குப் போகவில்லை. அதனால் வீட்டில் இருந்தேன். காலையில் மிகப்பெரிய சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டினர் எல்லாம் சர்ச்சில் குண்டுவெடித்ததாகக் கூறினார்கள். உடனே அங்கு ஓடினேன். அங்கு நான் கண்ட காட்சிகளை எப்போதும் மறக்க மாட்டேன். மொத்த சர்ச்சும் அழிந்துபோயிருந்தது. மக்கள், இறந்தவர்களைத் தூக்கிக்கொண்டும், காயமடைந்தவர்களைத் தூக்கிக்கொண்டும் ஓடிக்கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்கள் அனைவரும் காயத்துடனே இருந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தெருக்களில் இறங்கி நடக்கவே பயமாக இருக்கிறது. மீண்டும் ஏதாவது குண்டுவெடித்துவிடுமோ என்ற பயத்திலேயே உள்ளேன்" என்று கூறும் ஷானகாவின் வீடு, குண்டுவெடிப்பில் சிக்கிய நீர்கொழும்பில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் அருகில் உள்ளது. அங்கு இருக்கும்போதுதான் இந்தச் சம்பவங்களைப் பார்த்துள்ளார்.

தாயுடன் தாசுன் ஷானகா

குண்டு வெடிக்கும்போது, இவரது தாயும் பாட்டியும் இந்த சர்ச்சில்தான் இருந்துள்ளனர்.  அதனால், சத்தம் கேட்டவுடன் அவர்களைப் பார்க்கச் சென்றுள்ளார். இவரது தாய் குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்துவிட, பாட்டிக்கு மட்டும் தலையில் அடிபட்டுள்ளது. அவருக்கு தற்போது அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக ஷானகா தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க