`தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் இங்கிலாந்தில் பட்டப்படிப்பு படித்தவர்!' -இலங்கை அமைச்சர் பகீர் | sri lanka Defence minister Ruwan Wijewardene addressing a press conference about bomb attack

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (24/04/2019)

கடைசி தொடர்பு:13:30 (24/04/2019)

`தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் இங்கிலாந்தில் பட்டப்படிப்பு படித்தவர்!' -இலங்கை அமைச்சர் பகீர்

ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கை தலைநகர் கொழும்பில், எட்டு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில், இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு, ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சம்பவம் நடந்து மூன்று நாள்கள் ஆகியும், இன்னும் பல பகுதிகளில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்படுவதால், தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது.

இலங்கை

இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம்குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே, ‘புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இன்னும் ஓரிரு நாள்களில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும். தற்கொலைப் படையைச் சேர்ந்த அனைவருமே படித்தவர்கள். அவர்கள், மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. சிலர், பட்டப்படிப்பு முடித்தவர்கள். அவர்களில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர்’ எனத் தெரிவித்தார்.

இலங்கை

இந்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கையை ஏன் பகிரவில்லை என்ற கேள்விக்கு, ‘ அதுபற்றி எனக்குத் தெரியவில்லை. அதில் பல குறைகள் இருந்துள்ளன. நியூஸிலாந்து மசூதியில் நடந்த தாக்குதலுக்கும், தற்போது இலங்கையில் நடந்துள்ள தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த இரு சம்பவங்களுக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். சில இடங்களில் மக்கள் இன்னும் வெளியில் நடமாடிவருகின்றனர். அதை அவர்கள் தவிர்க்க வேண்டும். 

பாதுகாப்புத் துறை அமைச்சர்

இலங்கை முழுவதும் மொத்தமாக 9 குண்டு வெடிப்புச் சம்பவங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றில் 8 மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளன. தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒன்பதாவது ஆள், ஒரு பெண். டெமட்டகோடா பகுதியில் அந்தப் பெண் பிடிபட்டபோது, தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைப் படையைச் சேர்ந்த மற்றொருவரின் மனைவிதான் இந்தப் பெண். 

நமக்கு உதவிய முதல் நாடு இந்தியா தான். நாம் எப்போதும் அவர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள அனைவருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள்தான். எந்த வெளிநாட்டவரும் கைதாகவில்லை’ எனக் கூறியுள்ளார்.