ஆதாரங்கள், புகைப்படங்களை வைத்து இலங்கை அமைச்சர்கள் வீட்டில் திடீர் சோதனை! | Raid in Sri Lanka leaders and ministers home

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (24/04/2019)

கடைசி தொடர்பு:15:05 (24/04/2019)

ஆதாரங்கள், புகைப்படங்களை வைத்து இலங்கை அமைச்சர்கள் வீட்டில் திடீர் சோதனை!

இலங்கை   தேவாலயத்தில் குண்டு  வெடிப்பு

‘கடந்த ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 

நூற்றுக்கணக்கானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதற்கிடையில் இலங்கை அரசு அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது. அதோடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்கின்றன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இலங்கையில்  குண்டு  வெடிப்பு

 

இது குறித்து இலங்கை பத்திரிகையாளர் நேசனிடம் பேசியபோது, ``குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இங்குள்ள இஸ்லாமியக் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியவர்களிடமிருந்த பெறப்பட்ட ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவை இங்குள்ள தலைவர்களுக்கு தொடர்புடையதாக இருக்கின்றன. குறிப்பாக, இலங்கை அமைச்சர்கள் அசாத் சாலி, இஸ்புல்லா  உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடக்கிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை  குறித்து, தீவிரவாதிகள் தரப்பிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையிலேயே நடப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது" என்றார்.