பணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள் | Sri Lanka businessman's sons involved in colombo attack

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (25/04/2019)

கடைசி தொடர்பு:11:04 (25/04/2019)

பணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்

ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட இலங்கை கிறித்துவர்கள் அங்குள்ள தேவாலயங்களில் கூடியிருந்தனர். அதேபோல, கோடை நாள்களில் இலங்கையின் அழகை ரசிக்க வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள், அங்குள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தங்களின் நாளை சிறப்பாகக் கழிக்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத சோகம் மட்டுமே மிஞ்சியது என்றே கூற வேண்டும்.

இலங்கை

ஆம், ஏப்ரல் 21,2019, இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு கறுப்பு நாள். இந்திய நேரப்படி காலை 8:45 மணிக்கு கொழும்பைச் சுற்றியுள்ள மூன்று தேவாலயங்கள், மூன்று ஹோட்டல்கள் ஒரு குடியிருப்புப் பகுதி, ஒரு திருமண மண்டபம் ஆகிய எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல், மொத்த உலகையும் உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேவாலயம்

இலங்கை முழுவதும் மொத்தம் 9 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் 8 இடங்களில் மட்டுமே அது செயல்படுத்தப்பட்டதாகவும், நேற்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒன்பதாவது ஆள், ஒரு பெண் என்றும், அவர் டெமட்டகோடா பகுதியில் பிடிபட்டபோது தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்தக் கும்பலுக்கும் இலங்கையைச் சேர்ந்த நறுமணப் பொருள்கள் வர்த்தகரின் மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாக, தற்போது புதிய தகவல் கூறப்பட்டுள்ளது. இதை இந்திய உளவுத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கை வர்த்தகத்தில் தவிர்க்க முடியாத பெரும் புள்ளியாக உள்ளவர், முகமது யூசுஃப் இப்ராஹிம். இவர், அந்நாட்டில் உள்ள ஜனதா விமுக்தி பேராமுனா கட்சியைச் சேர்ந்த நிர்வாகியாகவும் உள்ளார். இப்ராஹிமுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.  முதல் மகன் இன்ஷாஃப் அகமது இப்ராஹிம்,  இரண்டாவது மகன் இல்ஹாம் அகமது இப்ராஹிம் , மூன்றாவது மகன் இஜாஸ் அகமது இப்ராஹிம். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய தற்கொலைப்படையைச் சேர்ந்த எட்டுப் பேரில் இப்ராஹிமின் மகன்களும் இருந்துள்ளனர்.

மக்கள் அஞ்சலி

முதல் மகனான இன்ஷாஃப் மற்றும் இரண்டாம் மகனான இல்ஹாம் ஆகிய இருவரும், சமீபத்தில் இலங்கையில் உள்ள தன்ஹீத் ஜமாத் இயக்கத்தினரோடு இணைந்து, அவர்கள்மூலம் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்ததாகக் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு சம்பவதன்று டெமட்டகோடாவில் உள்ள தங்களின் பங்களாவில் இருந்து கிளம்பிய இருவரில் ஒருவர், சின்னமன் கிராண்ட் ஹோட்டலுக்கும், மற்றொருவர் சங்கரி லா ஹோட்டலுக்கும் சென்று, சரியாக ஒரே நேரத்தில் தங்களின் பையில் வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். நட்சத்திர ஹோட்டல்களுக்கு பணக்கார வீடுகளைச் சேர்ந்தவர்கள் சென்றால், எந்தச் சோதனையும் நடத்தப்பட மாட்டாது என்ற ரீதியில் இவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் போன்ற மற்றொருவர், அருகில் உள்ள கிங்ஸ்புரி ஹோட்டலுக்குச் சென்று, அவரும் அதே நேரத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இலங்கை

தொழிலதிபர் இப்ராஹிம் குடும்பத்துக்கும் இலங்கை குண்டுவெடிப்புச் சம்பத்துக்கும் தொடர்பு இருப்பதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்க ஐக்கிய கூட்டணி மற்றும் இலங்கையில் உள்ள கிறித்துவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர் இப்ராஹிமையும் அவரது மூன்றாவது மகன் இஜாஸையும் இலங்கை காவல் துறையினர் சிறைப்பிடித்துள்ளனர். இஜாஸிடம் முறையான விசாரணை நடத்தப்பட்டால், தாக்குதலின் நோக்கம், இதை யார் செய்தார்கள், இதில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது, இவர்களை யார் இயக்குகிறார்கள், இஜாஸின் சகோதரர்கள் தீவிரவாத கும்பலுடன் இணைந்தது எப்படி போன்ற அனைத்துத் தகவல்களும் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்ணீர்

இப்ராஹிம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வீட்டின் மூன்றாவது தளத்தில் வெடிபொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், சோதனை முயற்சியின்போது மூன்று காவலர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு சரியாக10 நாள்களுக்கு முன்பே, இந்திய ரா அமைப்பு (Research and Analysis Wing  - RAW) இது பற்றி இலங்கை காவல் துறையிடம் தெரிவித்ததாக விசாரணை ஆணையத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.