`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்!'- மகளின் இறப்பால் தந்தை உருக்கம் | Fathers pleasing post for her daughter

வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (25/04/2019)

கடைசி தொடர்பு:10:00 (26/04/2019)

`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்!'- மகளின் இறப்பால் தந்தை உருக்கம்

அன்றைய காலகட்டத்தில் குழந்தைகளைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் ஸ்டூடியோ சென்று எடுக்க வேண்டும். அதை ஃப்ரேம் போட்டு வைத்துக்கொள்வார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில்  தங்கள் குழந்தைகளின் மழலைப் பருவம் முழுவதையும் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர். அவை அனைத்தையும் பொக்கிஷங்களாக பாதுகாக்கின்றனர். ஆனால், இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. பெரும்பாலும் போனில்தான் புகைப்படங்கள் எடுத்து வைப்போம். அவற்றை பேக்-அப் எடுத்து வைக்கவில்லையென்றால், ஒருவேளை மொபைல் தொலைந்து போனாலோ, பழுதாகிப் போனாலோ அத்தனை பொக்கிஷங்களும் அழிந்துவிடும். எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும்.

தந்தை
 

மெல்போர்னில் இப்படியொரு கசப்பான நிகழ்வு நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தலைநகரான மெல்போர்னில் வசித்து வரும் ஜே - தீ தம்பதியின் 11 மாத கைக்குழந்தை அண்மையில் இறந்துவிட்டது. நரம்பியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் குழந்தையின் பெயர் அமையா.  உடல் அளவில் நிறையப் பிரச்னைகளும் இருந்தாலும் அமையா தன்னை தூக்கிக் கொஞ்சுபவர்களை பார்த்து பொக்கை வாய் சிரிப்பை சிந்த ஒருநாளும் மறந்ததேயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் தன் குழந்தையின் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் தன் மொபைல் போன் முழுவதும் படம்பிடித்து வைத்திருந்தார்  குழந்தையின் அம்மா தீ.  11 மாதக் குழந்தை என்றாலும் தன் உடல் வலிகளை முகத்தில் காட்டவேமாட்டாளாம் அமையா. எந்நேரமும் சிரிப்பும் கும்மாளமும்தான் அவளின் கண்களில் தெரியும். அவளின் ஒவ்வோர் அசைவையும் பார்த்து வியந்து ரசித்து, அந்த அன்பின் நொடிகளை மொபைலில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வார்களாம் ஜே தம்பதி. 

அமையா
 

மனம் உறுதியாக இருந்தாலும், உடல் ஒத்துழைக்காததால் அமையா ஏப்ரல் 20-ம் தேதி உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முகநூலில் பதிவிட்ட ஜே, கூடவே ஆஸ்திரேலியா மக்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையும் வைத்திருந்தார். அவரின் பதிவு பின்வருமாறு,

``என் மனைவி தீ-யின் போனை யாரோ திருடிவிட்டார்கள். என் மகள் அமையா தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன. தயவு செய்து அந்த போனில் உள்ளவற்றை அழித்துவிடாதீர்கள். என் மகளின் வாழ்நாள் மிகவும் சிறியது. அதன் நினைவுகளை நாங்கள் பொக்கிஷங்களாக அந்த மொபைலில் சேமித்து வைத்துள்ளோம். அந்த போனில் உள்ளவற்றை மட்டும் எங்கள் மொபைலுக்கு அனுப்பிவிட்டு அந்த போனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். ப்ளீஸ்.. உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். உங்களுக்கு புது போன்கூட வாங்கிக் கொடுக்கிறோம். என் மொபைல் நம்பர்  இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன். அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு போனை வைத்திருந்தால் சொல்லிவிடுங்கள். நீங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்கத் தயார். தயவுசெய்து என் பதிவை அனைவரும் பகிருங்கள்’’ என்று உருக்கமாகப் பதிவிட்டார். அந்தப் பதிவை ஆஸ்திரேலியா மக்கள் பெருமளவு பகிர்ந்தனர். 

அமையா
 

இந்நிலையில் இன்று காலை ஜே மற்றொரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்..

‘’ என் மகள் இன்று அதிகாலை 2 மணியளவில் தன் சிறகை விரித்து கடவுளிடம் பறந்து சென்றுவிட்டாள். அவளின் கடைசி நிமிடங்கள் எங்கள் மடி மீது அமைதியாகக் கழிந்தது. அவளுக்கு ஏற்பட்ட நரம்பியல் நோயைத் தைரியமாக எதிர்த்துப் போராடினாள். அவளின் முதல் மூச்சு முதல் இறுதி மூச்சு வரை அவளின் தன்னம்பிக்கையும் உறுதியும் எங்களை ஆச்சர்யப்படுத்தியது. நாங்கள் கொஞ்சிக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பாள். இன்று எங்கள் மடி வெறுமையாகிவிட்டது. எங்கள் வீடு வெறிச்சோடிவிட்டது. ஆனால், என் மகள் இனி எந்த வலியிலும் துடிக்கமாட்டாள். இந்த உலகம், எங்கள் பெற்றோர் என அனைவரும் கற்றுக்கொடுத்ததைவிட அமையா எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் உன்னதமானவை. 

அமையா
 

உன் அழகான குண்டு கன்னங்களை எங்கள் வாழ்நாளில் ஒருநாளும் மறக்கமாட்டோம். உன் பொக்கை வாய் சிரிப்பு எங்கள் மனதில் பதிந்துவிட்டது. நீ வளர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்று நாங்கள் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. காரணம் நீ பிறந்தது முதலே எங்களை நிறைய பெருமை கொள்ளச் செய்துவிட்டாய். உன்னால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உன்னை எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்போம். அம்மாவும் அப்பாவும் எப்போதும் உன்னுடன்  இருப்போம்’’ என்று உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். 

அமையா
 

அமையா கடவுளின் மடியில் உறங்கிவிட்டாள். ஜே - தீ மனமுடைந்துவிட்டனர். அமையாவின் அத்தனை நினைவுகளும் அடங்கிய அந்த மொபைல் போன் இன்னும் கிடைக்கவில்லை. ஜே முகநூல், தொலைக்காட்சி என விளம்பரம் கொடுத்துள்ளார். தன் மொபைலைக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜே-வுக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் பல்லாயிரக்கணக்கானோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.  சீக்கிரமே மொபைல் கிடைக்க வேண்டும் என்று நம்புவோம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை