`அந்த நபரிடம் `பை'யில் என்ன இருக்கிறதுன்னு என் கணவர் கேட்டார்; குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்!' - இலங்கைப் பெண் கண்ணீர் | The worshipper who blocked a bomber in Srilanka

வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (25/04/2019)

கடைசி தொடர்பு:17:17 (25/04/2019)

`அந்த நபரிடம் `பை'யில் என்ன இருக்கிறதுன்னு என் கணவர் கேட்டார்; குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்!' - இலங்கைப் பெண் கண்ணீர்

ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள் உட்பட 9 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த தினத்தில் தனது குடும்பத்தினருடன் பிரார்த்தனைக்காகத் தேவாலயத்துக்கு வந்த ரமேஷ் ராஜூ என்பவர் தனது உயிரைக்கொடுத்து நூற்றுக்கணக்காக மக்களின் உயிரைக் காத்துள்ளார். 

ரமேஷ் ராஜூ

Photo credit: BBC 

கான்ட்ராக்டரான ரமேஷ் ராஜூவுக்கு கிறிஸாந்தினி (Chrishantini) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கிறிஸாந்தினி, குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட சியோன் தேவாலயத்தில் ஞாயிறுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்காக ரமேஷ் ராஜு தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். சியோன் தேவாலயத்தில் ஞாயிறுப்பள்ளி ஆசிரியையாக இருக்கும் கிறிஸாந்தினி, தன் மகள் மற்றும் பிற குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துவிட்டு ஈஸ்டர் பிரார்த்தனைக்காகக் காத்திருந்துள்ளார். பிரார்த்தனை நீண்ட நேரமாகும் என்பதால் தன் குழந்தைகளுடன் வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு தேவாலயத்துக்கு தன் கணவருடன் திரும்பியுள்ளார். தேவாலயத்துக்குள் பெரிய பையுடன் உள்ளே செல்ல முயன்றவரைத் தடுத்து ரமேஷ் ராஜூ விசாரித்துள்ளார். இதற்கிடையில் கிறிஸாந்தினி மற்றும் குழந்தைகள் தேவாலயத்துக்குள் சென்றுவிட்டனர். சிறிதுநேரத்தில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இலங்கை

ரமேஷ் ராஜூவால் தடுக்கப்பட்ட நபர் தேவாலயத்தின் வெளியில் வெடிகுண்டை வெடிக்கச்செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு பல்வேறு திசையில் ஓடினர். கிறிஸாந்தினியும் தன் குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பிச்சென்றார். ரமேஷைத் தேடி கிறிஸாந்தினி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். தன் கணவரை சடலமாகத்தான் அவரால் காணமுடிந்தது. குண்டுவெடிப்பில் ரமேஷ் ராஜூ உயிரிழந்தார். திங்கள்கிழமை ரமேஷ் ராஜூவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்தச் சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசியுள்ள கிறிஸாந்தினி, ``ஈஸ்டர் பிரார்த்தனைக்காகத் தேவாலயத்தில் காத்திருந்தோம். அப்போது ஒருவர் பெரிய பை ஒன்றைத் தோளில் சுமந்துவாறு தேவாலயத்தின் உள்ளே நுழைய முயன்றார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை என் கணவர் உணர்ந்திருந்தார். அந்த நபரிடம், `பையில் என்ன இருக்கிறது' என்று கேட்டார். அதற்கு அந்த நபரோ தேவாலயத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக வந்துள்ளேன். பையில் வீடியோ கேமரா உள்ளது எனக் கூறினார்.

அந்த நபரின் பேச்சில் திருப்தியடையாத என் கணவர், உரிய அனுமதிபெற்று வருமாறு திருப்பி அனுப்பினார். ஆனால், அந்த நபரோ தொடர்ந்து என் கணவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என் கணவர் எங்களோடு பிரார்த்தனையில் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் தேவாலயத்துக்குள் சென்றோம். ஆனால், நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் குண்டு வெடித்தது. என் கணவர் உயிரிழந்துவிட்டார். நான் கடைசியாக எனது கணவரை எங்கு பார்த்தேனோ அந்த இடத்தில்தான் அவர் உயிரிழந்திருந்தார். மருத்துவர்களும் குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்ததாகவே கூறினர். தேவாலயத்தில் 400-க்கும் அதிகமானோர் இருந்தனர். தேவாலயத்தின் உள்ளே குண்டு வெடித்திருந்தால் ஏராளமானோர் இறந்திருப்பார்கள். ராஜூ தனது உயிரைக் கொடுத்து ஏராளமானவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்” என்றார் கண்ணீர்மல்க.

கிறிஸாந்தினியின் பெற்றோர்கள் இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின்போது உயிரிழந்துள்ளனர். அவரது அத்தையும் 2004-ல் ஏற்பட்ட சுனாமியில் பலியானார். தற்போது கணவரை இழந்து வாடும் கிறிஸாந்தினிக்கு குழந்தைகள்தாம் ஆறுதலே.