`அவளுக்காக காத்திருப்போம்’ - நியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமிக்காக தந்தை உருக்கம் | Girl shot in Christchurch mosque attack suffered brain damage

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (25/04/2019)

கடைசி தொடர்பு:17:02 (25/04/2019)

`அவளுக்காக காத்திருப்போம்’ - நியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமிக்காக தந்தை உருக்கம்

நியூசிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும் கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் உள்ள இரு மசூதிகளில், அந்நாட்டு நேரப்படி கடந்த மாதம் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது. அல் நூர் (al Noor) மற்றும் டீன்ஸ் ஏவ் (Deans Ave) ஆகிய இரு மசூதிகளிலும் நடந்த தாக்குதலில், சுமார் 50 பேர் வரை சுட்டுக்கொல்லப்பட்டனர். 

நியூசிலாந்து தாக்குதல்

உலகில் உள்ள அமைதியான நாடுகளில், இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்தில் நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரில் இறங்கிய ஒருவன் சுமார் 15 நிமிடங்கள் தொடர் தாக்குதல் நடத்திய ஃபேஸ்புக் லைவ் வீடியோ பரபரப்பானது. 

இந்த நிலையில், நியூசிலாந்து மசூதி தாக்குதலில் பலத்த காயமடைந்த அலென் அல்சடி (Alen Alsati) என்ற ஐந்து வயது சிறுமியின் மருத்துவச் செலவுக்காக சமூகவலைதளங்களில் உதவிகள் கேட்கப்பட்டு வருகின்றன. சிறுமி குறித்து அவரின் தந்தை வாசிம் அல்சடி  (Wasseim Alsati), ``ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் நானும் அலெனும் வெளியில் சென்று அவளுக்கு இனிப்புகள், சாக்லெட்டுகள் போன்றவற்றை வாங்கிக்கொண்டு வருவோம். எப்போதும் அலெனை வீட்டில் விட்டுவிட்டு நான் மட்டும்தான் மசூதிக்குச் செல்வேன். ஆனால், தாக்குதல் நடந்த அன்று இனிப்புகளை வாங்கிக்கொண்டு இருவரும் நேராக மசூதிக்குச் சென்றுவிட்டோம். 

நாங்கள் சென்ற நாளில்தான் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனது உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்தது. இருந்தும் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. சிகிச்சைக்குப் பின் தற்போது குணமாகிவிட்டேன். ஆனால், அலெனின் தலையில் குண்டு பாய்ந்தது. இதில் அவளின் மூளை செயலிழந்தது. துப்பாக்கிச்சூட்டை அடுத்து அவளை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததும் பல அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. பத்து நாள்களுக்குப் பிறகுதான் அவள் கண் திறந்தால் அப்போது நாங்கள் யார் என்பதைக்கூட அவள் மறந்துவிட்டால். அவளால் பேசமுடியவில்லை, கேட்கமுடியவில்லை. அலென் எப்படி உணர்கிறாள் என்பது தெரியாமல் மிகவும் சிரமப்பட்டோம். 

என் மகள் பேசுவாள், அவளின் உடல் நிலை விரைவில் குணமாகும் என எனக்கு நம்பிக்கை இருந்தது. அவள் குணமடைய பல நாள் பிரார்த்தனைகளை செய்தோம் அவளுக்காக மொத்தக் குடும்பமும் மருத்துவமனையில் காத்திருந்தோம். தற்போது ஒரு மாதம் கடந்த நிலையில், அவளால் சிறிய சைகைகளைச் செய்ய முடிகிறது. எங்களை அடையாளம் தெரிகிறது மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.