`நீந்தக் கற்கும் முன்னே கடலில் மூழ்கிவிட்டன’ - வெப்ப மயமாதலால் அழியும் பென்குயின்கள் | Thousands of emperor penguin chicks drowned in Antarctica

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (25/04/2019)

கடைசி தொடர்பு:17:42 (25/04/2019)

`நீந்தக் கற்கும் முன்னே கடலில் மூழ்கிவிட்டன’ - வெப்ப மயமாதலால் அழியும் பென்குயின்கள்

அண்டார்டிகாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் சுமார் ஆயிரம் எம்பெரர் வகையைச் சேர்ந்த பென்குயின் குட்டிகள் கடலில் மூழ்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பென்குயின்கள்

`எம்பெரர் பென்குயின்’ என்பது பென்குயின் இனங்களிலேயே மிகப் பெரிய பென்குயின் ஆகும். 3 அடி உயரமுள்ள இவை அண்டார்டிகாவுக்கு அருகிலுள்ள தீவுகளில்தான் அதிகம் காணப்படுகின்றன. ஏறக்குறைய 2 மில்லியன் பென்குயின்கள் அந்தத் தீவில் உள்ளதாகக் கூறப்பட்டது.

பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வேயின்படி (British Antarctic Survey (BAS)) அனைத்துக் குட்டிகளும் சரியாக நீந்தக் கற்கும் முன்னரே பனிச்சரிவு காரணமாக இறந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 14,000 முதல் 25,000 ஜோடிகள் வரை இருந்த இனப்பெருக்க பென்குயின்கள் முழுவதுமாக காணாமல் போனதாகவும், எஞ்சியுள்ள ஜோடிகள் இனப்பெருக்கம் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை என்றும் பிரிட்டிஷ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்குயின்களுக்கு மிகப்பெரிய இனப்பெருக்க இடமாகக் கருதப்படும் அண்டார்டிகாவில் கடந்த மூன்று வருடங்களாக எந்த இனப்பெருக்கமும் நடக்கவில்லை. இந்த வருடத் தொடக்கமும் இருண்டே காணப்படுவதாக மற்றொரு ஆய்வில் கூறியுள்ளனர்.

பென்குயின்கள்

இனப்பெருக்க காலங்களில் அனைத்து பென்குயின்களும் மந்தை மந்தையாக ஹாலி பே (Halley Bay) பகுதியை நோக்கிச் சென்றுவிடும். ஒரு வருடத்துக்கு 24,000-க்கு அதிகமான பென்குயின்கள் செல்லும். இனப்பெருக்கம் செய்ய அந்த இடத்தை பென்குயின்கள் பாதுகாப்பாக கருதும். ஆனால், புவி வெப்ப மயமாதலின் காரணமாக 2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஹாலி பே பகுதியில் ஒரு பென்குயின்கள்கூட தென்படவில்லை என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

‘என் 60 வருட ஆராய்ச்சி வாழ்க்கையில் பென்குயின்களின் இனப்பெருக்க தோல்வியைக் கண்டதே இல்லை. ஆனால், தற்போது அவை இனப்பெருக்கமே செய்யாதிருப்பதைப் பார்க்கிறேன். இது இயற்கைக்கு முற்றிலும் முரணான இனப்பெருக்க தோல்வியாகவே பார்க்கிறேன்’ என இந்த ஆராய்ச்சியின் எழுத்தாளர் பில் ட்ராதன் (Phil Trathan) தெரிவித்துள்ளார்.