நாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை! - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு | Sri Lanka banned drones across the country

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (25/04/2019)

கடைசி தொடர்பு:19:15 (25/04/2019)

நாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை! - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு

இலங்கை குண்டு வெடிப்பு

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் எனப் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தற்கொலைப்படை தாக்குதலான இதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து சில நாள்கள் கடந்துவிட்ட போதிலும் நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. தாக்குதலில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இலங்கை

மேலும், அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்கும் விதமாகப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நாடு முழுவதும் ட்ரோன்கள் எனப்படும் சிறிய ரக விமானங்கள் பறக்க நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

`நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தானியங்கி விமானங்கள், ட்ரோன்கள் ஆகியவை பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, ட்ரோன்கள் இயக்குவதற்காக ஆணையம் அளித்திருந்த அனைத்து அனுமதிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. அடுத்த உத்தரவு வரும் வரை நாடு முழுவதும் ட்ரோன்களை இயக்க விதிக்கப்பட்ட தடை அமலில் இருக்கும்' என ஆணையம் வெளியிட்டுள்ள ஆணைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்

ட்ரோன்களை வெகுதொலைவில் இருந்தும் இயக்க முடியும். எனவே, அதைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆணையம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் எனத் தெரிகிறது


அதிகம் படித்தவை