2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை! | srilanka bomb blast "Raw" warned 2 hours ago

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:21:00 (25/04/2019)

2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை!

 லங்கையில் இன்று நீதிமன்றத்துக்கு அருகே மீண்டும் குண்டு வெடித்துள்ளது. இந்தக் குண்டு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் இந்திய உளவு அமைப்பான `ரா’ எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதில் உயிர்ச்சேதம் இல்லை என்றாலும் இலங்கை பாதுகாப்புத்துறையால் தடுக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை குண்டு  வெடிப்பு

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்படக் குண்டுகள் வெடித்ததில் சுமார் 350-க்கும்  மேற்பட்டோர் பலியாயினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையில் இன்று 'புக்கோடா' என்ற இடத்தில் மீண்டும் ஒரு குண்டு வெடித்துள்ளது. இதனால் அங்குள்ள இலங்கை மக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். இது குறித்து அங்குள்ள இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் பேசியபோது, "அதிபர்  மைத்ரிபால சிறிசேனா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்து முடிந்துள்ளது, 

சிவாஜிலிங்கம்

தற்போது மதத் தலைவர்களுடனான கூட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் இன்று நீதிமன்றத்துக்கு அருகே குண்டு  வெடித்துள்ளது. இந்தக் குண்டு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இந்திய உளவு அமைப்பான `ரா’ இலங்கை பாதுகாப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளது. மேலும், இது போன்ற தாக்குதல்கள் தொடரும் என்று `ரா’ எச்சரித்துள்ளது.

இதனால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இனி நடக்கும் தாக்குதல்களை அரசாங்கம் எப்படித் தடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்ட பாடசாலைகள் அடுத்த ஒரு வாரத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. நிலைமை  நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது" என்றார்.