`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு!' - என்ன நடக்கிறது இலங்கையில்? | sri lankan bombings investigation updates

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (25/04/2019)

கடைசி தொடர்பு:21:23 (25/04/2019)

`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு!' - என்ன நடக்கிறது இலங்கையில்?

இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பு ஐந்தாவது நாளாக இன்றும் பதற்றத்தில் இருக்கிறது. 

இலங்கைக் குண்டுவெடிப்பு

ஈஸ்டர் தினத்தில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைக் குறிவைத்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வெளிநாட்டவர்கள் உட்பட 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இலங்கையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

தாக்குதல் சம்பவம் குறித்து பல்வேறு நாடுகளின் உளவுத் துறை எச்சரிக்கை செய்தும், அந்த விவகாரத்தில் இலங்கை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதை இலங்கை அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது. அதேபோல், இலங்கைப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் சிறிசேன வலியுறுத்தியிருக்கிறார். இதையடுத்து பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ


தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 70-க்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்துள்ள இலங்கைக் காவல்துறை, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. தீவிரவாதம், தாக்குதலுக்கு உதவியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ள அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக இலங்கைக் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ரூவன் குணசேகரா தெரிவித்தார். பெரும்பாலானவர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 4 பேர் பெண்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

இலங்கைக் காவல்துறை மேற்கொண்டு வரும் இந்த விசாரணைக்கு இங்கிலாந்தின் ஸ்காட்லாண்ட் யார்டு, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ, இன்டர்போல் உள்ளிட்ட 6 நாடுகளின் விசாரணை அமைப்புகள் உதவி வருகின்றன. அதேபோல், கொழும்பின் புறநகர்ப் பகுதியான புகோடா பகுதியில் காலியாகக் கிடந்த பகுதியில் சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

இலங்கைக் குண்டுவெடிப்பு

அதேநேரம், கொழும்பின் மோடாரா பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள், 6 கத்திகள் மற்றும் ஒரு வேன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி கிறிஸ்தவ தேவாலயங்களில் நடக்கும்  பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய மூத்த பாதிரியார் ஒருவர், ``போலீஸாரின் அறிவுறுத்தலின்படி கொழும்பு நகரின் தேவாலயங்கள் அனைத்தையும் மூடியிருக்கிறோம்'' என்று தெரிவித்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பு நகரின் பெரும்பாலான பகுதிகளில் ராணுவத்தின் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

தாக்குதல் சம்பத்தின் எதிரொலியாக இலங்கை வந்ததும் விசா பெற்றுக்கொள்ளலாம் என்று 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனுமதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டினருக்குத் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும், இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா தெரிவித்திருக்கிறார். 

இலங்கையில் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்க்கும்படி அமெரிக்கா, தங்கள் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுகுறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `மத வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இலங்கை அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 26-ம் தேதி (நாளை) முதல் 28-ம் தேதி வரை மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்' என்று தெரிவித்துள்ளது. 

இலங்கை அரசு வெளியிட்டுள்ள சந்தேக நபர்கள் புகைப்படம்

இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அந்நாட்டு காவல்துறை, அவர்கள் குறித்த தகவல் தெரிந்தால், பொதுமக்கள்  0718591771, 0112422176 & 0112395606 - என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. பதற்றநிலையைத் தொடர்ந்து இலங்கை அரசு தொடர்ந்து 5வது நாளாக இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அந்நாட்டு நேரப்படி இன்று இரவு10 மணி முதல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

விசாரணை குறித்து சி.என்.என் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, மேலும் சில தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும்  என்ற எச்சரிக்கையுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், `தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோன்றதொரு தொடர் தாக்குதல்கள் நடத்தத் தயாராக இருக்கும் ஸ்லீப்பர் செல்களைக் கைது செய்வதிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார்.