100 -க்கும் அதிகமான பலி எண்ணிக்கையைக் குறைத்த இலங்கை - என்ன காரணம்? | Sri lanka reduces the death toll

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (26/04/2019)

கடைசி தொடர்பு:08:01 (26/04/2019)

100 -க்கும் அதிகமான பலி எண்ணிக்கையைக் குறைத்த இலங்கை - என்ன காரணம்?

இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், பலியானவர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு குறைத்து, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இலங்கை

ஈஸ்டர் தினத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைக் குறிவைத்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடைபெற்று 6 நாள்கள் ஆகியும் இலங்கையில் பதற்றம் குறையவில்லை. இரவு நேரங்களில் இன்னும் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. ஆங்காங்கே கண்டெடுக்கப்படும்  வெடிகுண்டுகள், மக்களை தொடர் பீதியில் வைத்துள்ளது. 

பலி

இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, தினம் தினம் பல்வேறு தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இந்தத் தாக்குதல்குறித்து இந்தியா முன்னரே எச்சரிக்கை செய்திருந்தும், இலங்கையால் இந்தத் தாக்குதல் முயற்சியை முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில், இலங்கை அரசு நேற்று அறிவித்த புதிய அறிவிப்பு சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை குண்டுவெடிப்பில் பலியனவர்கள்

கடந்த புதன்கிழமை நடந்த இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தில், தற்போது வரை 40 வெளிநாட்டினர் உட்பட, மொத்தம் 359 பேர் பலியானதாகத் தெரிவித்திருந்தது அரசு. இந்நிலையில், நேற்று இலங்கை அதிகாரிகள், பலி எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துத் தெரிவித்துள்ளனர். அதாவது, இலங்கை வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 253 எனத் தெரிவித்துள்ளனர். இதில், தனியாக வெளிநாட்டினர் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. 

ஏற்கெனவே, இந்தியா அளித்த எச்சரிக்கையை அரசுக்கு முறையாகக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், இலங்கை அரசின் இந்தப் பலி எண்ணிக்கை விவகாரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை

இதுதொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ள அறிவிப்பில்,  ``பல உடல்கள் மிக மோசமான நிலையில் சிதைக்கப்பட்டிருந்தன. அவை, இரண்டு அல்லது கூடுதல் பேராகக் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் வந்த பின்னர், உண்மையான பலி எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையாகக் கணிக்கிடாமல், சரியான எண்ணிக்கையை முன்னரே அறிவிக்கவேண்டிய அவசியம் என்ன? அதிக பலி எண்ணிக்கை, மக்கள் மத்தியில் இன்னும் அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரித்தது.  மேலும், இதுபோன்ற தகவல்கள் இலங்கை அரசின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடுகிறது என மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  இலங்கை அரசின் இந்த அலட்சியச் செயல்பாடு பெரும் அதிர்ச்சிதருவதாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.