``பெயர் சரி, புகைப்படம் தவறு!” - அமெரிக்க பெண் எழுத்தாளரிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை காவல் துறை | Please stop implicating and associating me with these horrific attacks - Amara majeed

வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (26/04/2019)

கடைசி தொடர்பு:09:07 (26/04/2019)

``பெயர் சரி, புகைப்படம் தவறு!” - அமெரிக்க பெண் எழுத்தாளரிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை காவல் துறை

இலங்கை குண்டுவெடிப்பில் தவறான சித்தரிக்கப்பட்ட அமெரிக்க எழுத்தாளர்

ஈஸ்டர் தினத்தில், இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.  விடுமுறையைக் கழிக்க இலங்கை வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக,  சந்தேக நபர்கள் 6 பேரின் புகைப்படங்களை அந்நாட்டு காவல் துறை வெளியிட்டது. இதில் அப்துல் காதர் ஃபாத்திமா கதியா ( Abdul Cader Fathima Qadiya) என்ற  பெண்ணைத் தேடப்படும் நபராக அறிவித்த காவல்துறை, அவரது புகைப்படம் எனக்கூறி தவறான புகைப்படத்தை வெளியிட்டது.  காவல்துறை வெளியிட்ட  புகைப்படத்தில் இருப்பவர், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் வசிக்கும் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அமாரா மஜீத்தின் ( Amara majeed) புகைப்படம் ஆகும். 

இதனால் அதிர்ச்சியடைந்த அமாரா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கண்டத்தைப் பதிவிட்டிருந்தார். அதில், “அனைவருக்கும் வணக்கம், ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான் தவறாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். இது முற்றிலும் தவறானது. இஸ்லாம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஏற்கெனவே கண்காணிப்பு சிக்கல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்கு இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் அவசியம் இல்லை. இந்தக் கொடூரமான தாக்குதலுடன் என்னைத் தொடர்புப்படுத்துவதை நிறுத்துங்கள்.  அடுத்த முறையாவது இதுபோன்ற தகவல்களை வெளியிடும்போது கவனமாக இருங்கள். நீங்கள் வெளியிடும் தகவல்கள், ஒரு குடும்பத்தையும் ஒரு சமூகத்தையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

 

 

 

இதையடுத்து, இலங்கை காவல் துறை தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை காவல் துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் அப்துல் காதர் ஃபாதிமா காதியா என்ற பெண் தேடப்படும் நபராக உள்ளார். அவரது புகைப்படம் எனக் கூறி வெளியிடப்பட்ட படம் தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.