குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் எந்த நாட்டுக்காரர்கள்?- பட்டியலை வெளியிட்டது இலங்கை அரசு | 40 foreign nationals dead in sri lanka bombing - MEA SL

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (26/04/2019)

கடைசி தொடர்பு:12:10 (26/04/2019)

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் எந்த நாட்டுக்காரர்கள்?- பட்டியலை வெளியிட்டது இலங்கை அரசு

இலங்கை

இலங்கை, 'ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 40 பேர்' என்று இன்று காலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஞாயிறு அன்று, இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகள், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட,  200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக, இலங்கை அரசு மாறுபட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது. 

இன்று காலை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

ஒருவர்-வங்கதேசத்தவர், 
2 பேர் - சீனாவைச் சேர்ந்தவர்கள், 
11 பேர் -இந்தியர், 
3 பேர் - டென்மார்க்,
ஒருவர் - ஜப்பான், 
ஒருவர் - நெதர்லாந்து, 
ஒருவர் -போர்ச்சுக்கல், 
ஒருவர் - சவுதி அரேபியா,  
ஒருவர் - ஸ்பெயின், 
ஒருவர்- சுவிட்சர்லாந்து,
2 பேர் - துருக்கி,  
6 பேர் - பிரிட்டன்,  
ஒருவர் - அமெரிக்கா, 
2 பேர் - அமெரிக்க - பிரிட்டன் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், 
ஒருவர் - சுவிஸ் மற்றும் டச்சு இரட்டைக் குடியுரிமை பெற்றவர்,
ஒருவர் - டச்சு மற்றும் இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்றவர், 
2 பேர் - ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

உயிரிழந்த வெளிநாட்டவர்களில், இதுவரை 16 பேரின் சடலங்கள் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும்14 வெளிநாட்டவர் குறித்த விவரம் உறுதிசெய்யப்படவில்லை என்றும், கொழும்பில் உள்ள சட்ட மருத்துவ அதிகாரி பணியகத்தில் சடலங்களாக வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாதோரில் இவர்களும் இருக்கலாம் என்றும், இலங்கை வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்த வெளிநாட்டவர்களில் ஐந்து பேர், இன்னும் தென் கொழும்பில் உள்ள கற்பித்தல் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். மற்றவர் அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனைகளிலிருந்து அனுப்பப்பட்டுவிட்டனர். 

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவரின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, 0112323015 எனும் அவசர ஹாட்லைன் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.