மசூத் அசார் விவகாரத்தில் சீனா திடீர் பல்டி ஏன்? - பின்னணியில் இருக்கும் 2 காரணங்கள் | Masood Azhar as a UN designated terrorist

வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (02/05/2019)

கடைசி தொடர்பு:10:41 (02/05/2019)

மசூத் அசார் விவகாரத்தில் சீனா திடீர் பல்டி ஏன்? - பின்னணியில் இருக்கும் 2 காரணங்கள்

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராகப் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்  ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீர்மானத்துக்கு அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில் சீனா மட்டும் முட்டுக்கட்டைப் போட்டது.

புல்வாமா தாக்குதல்

பல வருடங்களாகவே இந்தக் கோரிக்கை ஐ.நா கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் சீனா அதற்கு ஒப்புதல் அளிக்காமலே இருந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இதற்கு ஜெயிஷ் இ முகமது அமைப்புதான் காரணம் எனப் பின்னர் நடந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாய் அறிவித்தே ஆக வேண்டும் என உலக நாடுகள் போர்க்கொடி தூக்கின. இருந்தும் இதை சீனா சற்றும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு கடுமையான கண்டனங்களும், எச்சரிக்கைகளும் விடுத்தன. 

ஐ.நா அமைப்பு

இதற்கிடையில், நேற்று ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். அவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் மசூத் அசாரின் சொத்துகள் உலகில் எங்கு இருந்தாலும் முடக்கப்படும், அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்ல முடியாது. ஜெயிஷ் இ முகமது அமைப்புக்கு எந்த நாடும் உதவி செய்ய முடியாது

இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கத் தொடர்ந்து தடை போட்ட  சீனா  தற்போது திடீரென அதற்கு ஒப்புக்கொண்டது எப்படி என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இந்தத் திடீர் மாற்றத்துக்கு இரண்டு பெரும் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 1) கடந்த வருடம் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றிருந்தார் இந்தியப் பிரதமர் மோடி. அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை, டோக்லம் பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசித்தனர். அப்போது மசூத் அசார் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. மோடியின் இந்த சீனப் பயணத்துக்குப் பிறகு இந்தியா- சீனா இடையேயான உறவு வலுப்பெற்றதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் ஆகியவற்றால் தற்போது மசூத் அசார் விவகாரத்தில் சீனா ஒத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மசூத் அஸார்

2)  சில மாதங்களாக ஜெயிஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு உடல்நிலை சரியில்லை எனப் பல செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் அவர் இறந்துவிட்டார் என்ற தகவலும் கூறப்பட்டது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் இனி பாகிஸ்தானுக்கு எந்தப் பயனும் இல்லை எனக் கூறப்படுவதும் சீனா ஒப்புக்கொண்டதற்கு மற்றொரு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.