உலகின் காஸ்ட்லி காருக்கு சொந்தக்காரராகும் ரொனால்டோ! | Cristiano Ronaldo buys worlds costliest car - report

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (02/05/2019)

கடைசி தொடர்பு:17:29 (02/05/2019)

உலகின் காஸ்ட்லி காருக்கு சொந்தக்காரராகும் ரொனால்டோ!

புகாட்டி காஸ்ட்லி சார்

Photo Credit: Motor1.com

ஜெனீவா மோட்டார் ஷோ 2019 - உலகின் விலை உயர்ந்த கார் என புகாட்டி (Bugatti) நிறுவனம் ஒரு காரை அறிமுகம் செய்தது. அதன் பெயர், `லா வாய்ச்சூர் நோய்ரி (La Voiture Noire). அதன் கீழே, தி ப்ளாக் கார் (The Black Car) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அளவிலே இந்த ரக கார் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த கார் குறித்த தகவல்கள்தான் அப்போது செம்ம வைரலானது. இந்த கிரகத்தின் காஸ்ட்லியான கார் என இது கொண்டாடப்பட்டது. 

கார்

Photo: Business Insider

ஸ்போர்ட்ஸ் மாடல் காரான இது, மணிக்கு 260 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது, சுமார் மணிக்கு  418 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன்கொண்டது. இந்த காரின் விலை 11 மில்லியன் யூரோ. இந்திய மதிப்பில், சுமார் 86 கோடி ரூபாய். இந்த கார் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில், நேற்று முதல் ஒரு தகவல் இணையத்தில் பரவிவருகிறது. அதாவது, கால்பந்து உலகின் முன்னணி வீரரான போர்ச்சுக்கலின் ரொனால்டோ, இந்த காரை வாங்கியதாகப் பரவிய தகவல்தான் அது. 

ரொனால்டோ

முன்னதாக, புகாட்டி நிறுவனத்தின் இந்த காஸ்ட்லி காரை ஒருவர் புக் செய்துவிட்டதாகவும், ஆனால் அந்நிறுவனம் தனது கஸ்டமர் யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில்தான், ஸ்பெயினில் வெளியாகும் ஒரு ஸ்போர்ட்ஸ் ஊடகம், அந்த காரை வாங்கியவர் ரொனால்டோதான் எனச் செய்தி வெளியிட, தற்போது இது ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. 

முன்னதாக, இந்த காரை ஃபோக்ஸ்வோகன் கார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஃபெர்டினண்ட் பியீச் என்பவர் புக் செய்திருப்பதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ரொனால்டோ இந்த காஸ்ட்லி காரை வாங்கியதாக வெளியாகும் தகவல்கள் உண்மை என்றாலும், அவரின் கைகளில் இந்த கார் 2021-ம் ஆண்டுதான் கிடைக்கும். இந்த காரின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.

ரொனால்டோ இந்த காரை வாங்கியதாகச் சொன்னாலும், அனைவரும் நம்புவார்கள். அவருக்கு காஸ்ட்லியான பொருள்கள் மீது எப்போதும் நாட்டம் உண்டு. ஏற்கெனவே அவர், பென்ஸ் சி க்ளாஸ் ஸ்போர்ட் கார், ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம், ஃபெராரி, லாம்போர்கினி, ஆஸ்டோன் மார்டின், பென்ட்லி எனப் பல்வேறு சொகுசு அதிவேக காஸ்ட்லி கார்களை வைத்திருக்கிறார். விலை உயர்ந்த கடிகாரங்கள் பலவும் அவரிடம் இருக்கின்றன. 

எனினும், இந்த காரை ரொனால்டோ வாங்கியதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. சில செய்தி நிறுவனங்கள் இந்த காரை வாங்கியவர் ரொனால்டொ அல்ல என மறுத்தும் செய்திகள் வெளியிட்டுள்ளன.