`பப்ஜி விளையாடத் தடை விதித்துவிட்டார்!' - கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கும் மனைவி | UAE woman seeks divorce from husband as he stops her from playing PUBG

வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (02/05/2019)

கடைசி தொடர்பு:21:41 (02/05/2019)

`பப்ஜி விளையாடத் தடை விதித்துவிட்டார்!' - கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கும் மனைவி

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் விவாகரத்து வழக்கு, அந்நாட்டு போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

பப்ஜி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மீன் காவல் நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர், தனது கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற விரும்புவதாகவும், அதற்கு உதவும்படியும் கேட்டிருக்கிறார். இதையடுத்து, அந்தக் காவல் நிலையத்தின் சமூக பாதுகாப்புப் பிரிவுக்கு அவர் அனுப்பப்பட்டிருக்கிறார். அங்கு நடந்த சம்பவம்குறித்து கல்ஃப் நியூஸ் ஊடகத்திடம் பேசிய சமூக பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் கேப்டன் வஃபா கலீல், `பப்ஜி விளையாடத் தடை விதித்ததன்மூலம் தனது தனிப்பட்ட சுதந்திரத்தில் கணவர் தலையிட்டுவிட்டதாகவும் தனக்கு விருப்பமான பொழுதுபோக்கைத் தேர்வுசெய்ய அவர் தடை விதித்ததன்மூலம் தன்னை ஒடுக்குவதாகவும் கூறி, அவர் விவாகரத்து கோரினார்.

அஜ்மீன் காவல்நிலையத் தலைமையகம்


பப்ஜி விளையாடக் கூடாது எனத் தடை விதித்ததால், கணவன் - மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்னரே, அந்தப் பெண் காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார். மேலும் அந்தப் பெண், `பப்ஜி விளையாட்டில் சாட் ஆப்ஷனை ஆன் செய்யாமலேயே தான் விளையாடியதாகவும், இதனால் முகம் தெரியாத அந்நியர்களுக்கு, தான் விளையாடுவது தெரியவாய்ப்பில்லை என்றும் கூறினார். இதன்மூலம் தனது உறவினர்கள் நண்பர்களுடன் மட்டுமேதான்  விளையாடியதாகவும் அவர் தெரிவித்தார்'' என்று கேப்டன் கலீல் கூறினார். 

விவாகரத்து

தனது மனைவி பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே அதை விளையாடமல் தடுத்ததாக அந்தக் கணவர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். குடும்பத்தின் அமைதி குலையாமல் இருப்பதற்காக, விளையாடக் கூடாது என்று தான் கூறியதாகச் சொன்ன அந்தக் கணவர், அது இப்படி ஒரு சூழலுக்கு இட்டுச்செல்லும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இப்படி ஒரு காரணத்துக்காக விவாகரத்து கோருவது இதுதான் முதல்முறை என்கிறார், கேப்டன் கலீல்.