சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம்! - பாகிஸ்தான் அறிவிப்பு | Pak Issues Order To Freeze Assets of Masood Azhar

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (03/05/2019)

கடைசி தொடர்பு:17:50 (03/05/2019)

சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம்! - பாகிஸ்தான் அறிவிப்பு

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் –இ – முகமது பயங்கரவாத அமைப்பினரால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 44 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். அந்த கொடூரத் தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவிக்க வேண்டுமென இந்தியா முயற்சி எடுத்தது.

இந்தியாவைப் போலவே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும் அதே கோரிக்கையை ஐ.நா-வில் வலியுறுத்திவந்தன. தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்த சீனா, இறுதியில் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடை விதிப்பு கமிட்டி, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.

மசூத் அசார்

ஐ.நா சபையின் அறிவிப்பையடுத்து மசூத் அசார் மீது நடவடிக்கை எடுத்தாகவேண்டிய கட்டாயச் சூழலுக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. எனவே, மசூத் அசாரின் சொத்துக்களை முடக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. மசூத் அசார் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதச் செயல்பாடுகளுக்காக வெடிமருந்துகள், ஆயுதங்கள் போன்றவற்றை வாங்கவும் விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமாக தீவிரவாதச் செயல்பாடுகளை அரவணைத்துவந்த பாகிஸ்தான், தற்போது தீவிரவாதத்துக்கு எதிராக சாட்டையைச் சுழற்றத் தொடங்கியிருப்பதற்கு, சமீபத்தில் இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புப் படுகொலைகளும் ஒரு காரணமென்று கருதப்படுகிறது.