``மக்களின் 10 ஆண்டு மகிழ்ச்சிகூட குண்டுவெடிப்புக்கு காரணமாக இருக்கலாம்?” - இலங்கை ராணுவ தளபதி | srilanka bombers visited Kashmir says army chief

வெளியிடப்பட்ட நேரம்: 10:19 (04/05/2019)

கடைசி தொடர்பு:10:23 (04/05/2019)

``மக்களின் 10 ஆண்டு மகிழ்ச்சிகூட குண்டுவெடிப்புக்கு காரணமாக இருக்கலாம்?” - இலங்கை ராணுவ தளபதி

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 21-ம் தேதி இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் சுமார் 253 பேர் உயிரிழந்தனர். ஐந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

இலங்கை குண்டுவெடிப்பு

இலங்கைக் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடைபெற்று பத்து நாள்களுக்கு மேல் ஆன நிலையில், அங்கு தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இலங்கை முழுவதும் இதில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை குண்டு வெடிப்பு

இது தொடர்பாக பிபிசி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக், `` குண்டு வெடிப்புக்குப் பிறகு எங்களுடைய ராணுவ அதிகாரிகள், உளவுப் பிரிவினர், காவல் துறையினர் போன்ற அனைவரும் இணைந்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத குழுக்களில் தொடர்புடைய பலரை நாங்கள் கைது செய்துள்ளோம். எங்களால் முடிந்த வரை இந்த விவகாரத்தை விரைவாகச் செய்து முடிப்போம் என நம்பிக்கையுள்ளது. 

இலங்கை ராணுவ தளபதி

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என சில உளவுத்துறையினரால் அனுமானிக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுதியான தகவல்கள் எதுவும் அளிக்கப்படாததால் பொதுமக்கள் அச்சம் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இங்கு தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்துள்ளனர். எங்களிடம் தற்போதுள்ள தகவல் இதுதான். அவர்கள் எதற்காக அங்கு சென்றார்கள் என்ற விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஏதாவது ஒரு பயிற்சி பெறவோ அல்லது வெளி நாடுகளில் உள்ள அமைப்புகளுடன் அவர்கள் தொடர்பு பெறவோ சென்றிருக்கலாம் என நிச்சயம் கூற முடியும். 

இலங்கை குண்டு வெடிப்பு

குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தியுள்ள முறையைப் பார்க்கும்போது இங்கு குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு வெளியில் ஏதாவது ஒரு தலைமையுடன் தொடர்பு இருக்க வேண்டும். தாக்குதலுக்கு முன் அது தொடர்பாக எங்களிடம் சில தகவல்கள் இருந்தன. ஆனால், வெவ்வேறு கோணத்தில் அனைவரும் கவனம் செலுத்திச் செயல்பட்டோம். இந்திய உளவுத் துறை வழங்கிய எச்சரிக்கையில் சற்று இடைவெளி நிலவியது. 

இலங்கை குண்டு வெடிப்பு

இலங்கையில் நடந்த இறுதிப் போருக்குப் பிறகு பத்து ஆண்டுகளாக மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்து தங்களின் சந்தோஷத்தை அனுபவித்தனர். ஆனால், பாதுகாப்பை மறந்துவிட்டனர். இதனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். இப்படிதான் கூறமுடியும்” எனப் பேசியுள்ளார்.